Politics
மதுராந்தகம் தொகுதி வரலாறு.. அதிமுகவின் கோட்டை.. தஃப் கொடுத்த திமுக

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுராந்தகம் தொகுதி வரலாறு குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
அதிமுகவில் இருந்து மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் கடந்த மே மாதம் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் விராலிமலை அதிமுக எம்எல்ஏ சி விஜயபாஸ்கர், கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 7 இடங்கள் காலியானதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,
வழக்கு இல்லாத தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், 16ஆம் தேதி நிறைவடைகிறது. வரும் 17ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், 19ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டு, 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில், 1962ல் தனித் தொகுதியாக வரையறுக்கப்பட்டது. 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக வென்ற நிலையில், 1967 சட்டப்பேரவை தேர்தலில் திமுக நிறுவனர் அண்ணா தலைமையிலான திமுக முதல் வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை 17 முறை சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மதுராந்தகம் தொகுதியில், அதிகபட்சமாக அதிமுக 7 முறை வெற்றி கண்டுள்ளது. 1980, 1989, 1991, 2001, 2011, 2021, 2026 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், 1967, 1971, 1977, 1984, 1996, 2016 ஆகிய தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது.
1952, 1957, 1962 தேர்தல்களில் தனித்து வெற்றி கண்ட காங்கிரஸ், 2006 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் வெற்றி வாகை சூடியது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் எழில்மலை 62 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜானகி ராமன் வெறும் 4 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்று கட்டுத்தொகையை கோட்டை விட்டார்.
