Science and technology
ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ
2367 கிலோ எடை கொண்ட EOS-5 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட்டை இஸ்ரோ அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-05’-ஐ சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது.
திட்டமிட்டபடி, சரியாக 18வது நிமிடத்தில் ராக்கெட் புவி சுற்றுவட்டப் பாதையை அடைந்ததும், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வழக்கமான குறைந்த புவி சுற்றுப்பாதைக்குப் பதிலாக பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்திய துணைக் கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்படவுள்ளதால், மல்டி-ஸ்பெக்டரல் மற்றும் ஹைப்பர் -ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் நிலப் பரப்பைத் தொடர்ந்து கண்காணித்து, வானிலை, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயனளிக்கும் வகையில் நிகழ்நேரத்துக்கு நெருக்கமான படங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோளாகும்.