Politics
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

சென்னை சூளைமேட்டில் உள்ள சென்னை எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவத் தேவைக்கேற்ப அவருக்கு சுவாச ஆதரவு உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 11-ஆம் தேதி) பிற்பகல் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் வெளியிட்டுள்ள புதிய மருத்துவ அறிக்கையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உரிய மருத்துவ சிகிச்சையின் மூலம் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, அப்போது திமுக தலைவராக இருந்த மு.க. ஸ்டாலினை எதிர்த்து 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவனம் பெற்றார்.
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அமைச்சர் மரிய வில்சன் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், வி.எஸ். பாபு நலமாக இருப்பதாகவும், உடல்நிலை தேறி வருவதாகவும் நேற்று தெரிவித்திருந்தார்.
