Religion
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் மண்டல பூஜை வரை இலவச தரிசனமா
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 ல் நடப்பதை முன்னிட்டு செப்.,20 வரை பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் நிலையில் மண்டல பூஜை வரையும் இச்சலுகையை அளிக்க அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு செப்.,17 ல் நடக்கிறது. லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு ஏற்பாடுகளை செய்ய நியமிக்கப்பட்டுள்ள 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நாளை முதல் பணிகளை ஆரம்பிக்கின்றனர். கும்பாபிஷேகத்தை காண 7 வண்ண 'பாஸ்'கள் வழங்கும் பணி துவங்க உள்ளது.
உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், நீதிபதிகள் என 5 ஆயிரம் பேருக்கு 'பாஸ்' வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் 2 ஆயிரம் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைனில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே கும்பாபிஷேகத்திற்கு பிறகு அம்மனையும், சுவாமியையும் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் செப்.,17 முதல் 20 வரை இலவச தரிசனம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதேநேரம் செப்.,18 முதல் அக்.,2 வரை மண்டல பூஜை நடக்கிறது. இதையும் காண பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். அப்போதும் கூட்ட நெரிசலை தவிர்க்க அக்.,2 வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கலாமா என அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது. இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என ஹிந்து வழக்கறிஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
கும்பாபிேஷகத்தையொட்டி செப்., 17 காலை முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தனியார் டிரஸ்ட் சார்பில் மெகா விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.