Politics
“அன்பில் மகேஸ் என்கிட்ட ஃபோனில் பேசினார்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று (16-09-26) காலை முதல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தனர். அதாவது இந்த லஞ்சப் புகாரில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பி.டி.அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு 6 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அன்பில் மகேஸ் இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது அன்பில் மகேஸ் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.என்.நேரு, “அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை நடத்துகின்றனர். அன்பில் மகேஸ் என்கிட்ட போனில் பேசினார். திமுகவில் யார் தீவிரமாக மக்கள் பணியாற்றுகிறார்களோ அவர்களை குறிவைத்து விஜய் அரசாங்கம் ரெய்டு மூலமாக பயமுறுத்த பார்க்கிறது. இந்த ரெய்டை எதிர்கொண்டு நீதிமன்றம் மூலமாக சந்தித்து குற்றவாளி என்ற தீர்ப்பை வாங்கி வெளியே வருவோம். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)