Arts, culture, entertainment and media
‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட கால அவகாசம் நீட்டிப்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகி கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தை கௌதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் , தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படம் பல்வேறு நிதி பிரச்சனை காரணமாக முடங்கி கிடந்தது. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படம் வெளியாக தடை உத்தரவு பெற்றிருந்தனர். இதில் தயாரிப்பாளர் மதனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதிக்குள் படத்தை வெளியிடலாம் என்று கடந்த ஏப்ரலில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். மேலும் அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட முடியவில்லை என்றால் கால நீட்டிப்பு கேட்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் குறிப்பிட்டபடி ஜூன் 15ஆம் தேதிக்குள் படத்தை வெளியிட முடியவில்லை. இதனால் ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கௌதம் மேனன் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அதற்கும் அனுமதித்தது நீதிமன்றம். ஆனாலும் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் கௌதம் மேனன் படத்தை வெளியிட அக்டோபர் 31ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் படத்தை வெளியிட இறுதியாக ஒரு முதலீட்டாளரை ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதன் மூலம் அனைத்து கடனாளிகளுக்கு கடனை செலுத்திவிட்டு படத்தை வெளியிடுவதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.10.57 கோடி விக்ரமிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுவதாகவும் ஆனால் அதற்கான உறுதிபடுத்தும் ஆவணம் இல்லையென்றும் தாக்கல் செய்த மேற்பார்வையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆவணத்தை மேற்பார்வையாளர்கள் முன்பு சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதி கௌதம் மேனனுக்கு உத்தரவிட்டுள்ளார். அதே போல் கௌதம் மேனனின் கோரிக்கையை ஏற்று படத்தை வெளியிட அக்.31 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
