Arts, culture, entertainment and media
துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ்.. காலக்கெடு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!

துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படம், வெளியாகாமலேயே பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 15க்குள் படத்தை வெளியிட அனுமதி அளித்து, கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தார். ஜூன் 15-க்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார். மீண்டும் இந்த கால நீட்டிப்பு ஜூலை 31க்கு சென்றது. ஆனால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இதற்கிடையே தான் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவுதம் மேனன் மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தனது மனுவில், படத்தை வெளியிட முதலீட்டாளர் ஒருவரை இறுதி செய்துள்ளோம் என்றும் கவுதம் வாசுதேவ மேனன் தரப்பு கூறியிருக்கிறது.
அதேநேரம் வழக்கின் விசாரணையின் போது ரூபாய் 10.57 கோடி தொகை நடிகர் விக்ரமுக்கு வழங்கப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் ஆவணம் இல்லை எனக் கூறிய நீதிபதி, 10.57 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதார ஆவணங்களை நீதிமன்றம் நியமித்த மேற்பார்வையாளர்கள் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
