Arts, culture, entertainment and media
“அரசியல் சாயம்... அவசரப்பட வேண்டாம்...” - விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்களுக்கு சீனு ராமசாமி வேண்டுகோள்!

தமிழில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது 10வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். வார இறுதியில் மட்டும் பேசும் இவர், கடந்த 12ஆம் தேதி வீட்டிற்குள் தலைவர் பதவி வகித்த ஷாகிதா குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல்.. தலைமை பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு, எதிரணி மீது பழியை தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை. அது ஏமாற்று வேலை” என்றிருந்தார்.
இது சமூக வலைதளத்தில் வைரலானது. அதாவது கரூரில் 41 பேர் இறந்தததைக் குறிப்பிட்டு அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யை மறைமுகமாக விஜய் சேதுபதி விமர்சித்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பலரும் கருத்து கூறி வந்தனர். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக மாற அரசியல் தளங்களிலும் சினிமா தளங்களிலும் பேசு பொருளாக மாறியது. இதனிடையே அதிமுக எம்.பி இன்பதுரை, “நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் தொலக்காட்சி விளக்கம் அளித்தது. அதாவது நிகழ்ச்சியை ஒட்டியே விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாகவும் அதனை யாரோடும் ஒப்பிடக்கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
இருப்பினும் விஜய் சேதுபதி தவெக தொண்டர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இந்த செயலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி விஜய் சேதுபதியின் கேரக்டர் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன். மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல. உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.
புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர். முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)