அங்கே அப்படி... இப்படி இப்படி! ஓ.பி. அடிக்கும் ஆபீசர்ஸ்... கவுன்சிலர் குற்றச்சாட்டு
அவிநாசி:அவிநாசி நகராட்சி அலுவலகத்தில், வேலை நேரத்தில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் பணியில் இல்லாமல் வெளியே சென்றதால், பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நகராட்சி அலுவலகத்தில், நேற்று மதியம் 12:45 மணியளவில் முக்கிய அதிகாரிகள் பலர் இல்லாததால், பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து, காமராஜர் வீதி கவுன்சிலர் திருமுருகநாதன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம், திண்டல் அருகே நகராட்சி அலுவலர் ஒருவரின் இல்ல விசேஷத்துக்காக, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிலர் விடுப்பு எடுக்காமலும், முறையாக பதிவேட்டில் பதிவு செய்யாமலும் வேலை நேரத்தில் வெளியே சென்றுள்ளனர். இதனால் நகராட்சி அலுவலகம் வெறிச்சோடியது. கடந்த ஒன்றரை மாதங்களாக நிரந்தர கமிஷனர் இல்லாததால், பொறுப்பு கமிஷனராக உள்ள திருமுருகன்பூண்டி கமிஷனர் பாலமுருகன் அவ்வப்போது மட்டுமே வந்து செல்வதால், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரே நேரத்தில் வெளியே சென்றது குறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அலுவலகம் மக்களுக்கான அலுவலகமாக முறையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.