Politics
கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம் பொன்னேரியில் அறுவடை பணி பாதிப்பு

பொன்னேரி: நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அறுவடை பணிகள் பாதித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சொர்ணவாரி பருவத்திற்கு, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது, அவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு சில கிராமங்களில் அறுவடை பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளதால், அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இது, விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஓரிரு நாட்களில் அனைத்து கிராமங்களிலும், அறுவடை பணிகள் தொடங்கி விடும். அறுவடை செய்தால், அவற்றை உடனே விற்பனை செய்வதற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அவசியம். அறுவடைக்கு பின் நெல்மணிகளை பாதுகாப்பதில் சிரமம் ஏற்படும்.
இதனால், விவசாயிகள் வெளி வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை உண்டாக்கும்.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
