Politics
அமைச்சர்கள், துறைகளின் செயல்பாடுகள்.. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மறுஆய்வு!

தேவையான நிர்வாக மாற்றங்களை மேற்கொள்வதற்கு இந்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அமைச்சகங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மட்டுமின்றி, தனிப்பட்ட அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களின் செயல்பாடுகளும் இக்கூட்டத்தில் தீவிரமாக மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
கல்வி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாயம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் இக்கூட்டத்தில் முதன்மையாக ஆய்வு செய்யப்பட உள்ளன. இதில் கேபினட் அமைச்சர்கள் மட்டுமின்றி, தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
நலிவடைந்த பிரிவினருக்கு அரசின் நலத்திட்டங்கள் தடங்கலின்றிச் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, உஜ்வாலா யோஜனா, ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத், பி.எம்-கிசான், ஜல் ஜீவன் மிஷன் மற்றும் ஸ்வச் பாரத் ஆகிய முதன்மைத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளது.
வெறும் திட்டங்களை அறிவிப்பதோடு நிறுத்தாமல், அவை தரைமட்டத்தில் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா, மற்றும் கள நிலவரத்தில் உள்ள குறைபாடுகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்கிற அரசின் "அனைவருடன், அனைவரின் வளர்ச்சிக்கும்" என்ற கொள்கையின்படி, ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் அதிகாரமளித்தலை மையமாகக் கொண்டு இந்தச் மதிப்பீடு அமைகிறது.
அரசின் நலத்திட்டங்கள் திறம்பட பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், தேவையான நிர்வாக மாற்றங்களை மேற்கொள்வதற்கும் இந்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
