Politics
கழுகார் பதில்கள்!

இந்த இடைத்தேர்தலில் மாலையைக் கொடுக்க வேண்டியது யானையிடம் இல்லை... குதிரையிடம்!
``த.வெ.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நரித்தந்திரம் நடக்கிறது’’ என்கிறாரே மாணிக்கம் தாகூர்?
‘யார் பிரதமர் வேட்பாளர்?’ என்று த.வெ.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் தள்ளு முள்ளைத்தான் சொல்கிறாரோ?
த.வெ.க-வுடன் கம்யூனிஸ்ட்டுகள் ‘தாமரை இலையும் தண்ணீரும்போல்’ இருக்கின்றனரா?
ஒருவகையில், ‘தாமரையோடு இலை’ இருப்பதுபோல வேண்டா வெறுப்பாக இருக்கிறார்கள்!
விஜய், அஜித் சந்திப்பு?
கார் பந்தய வீரருடன் ஓட்டப்பந்தய வீரர்!
சூரியன் இரவில் உதித்தால் எப்படி இருக்கும்?
முதலில் மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் உதிக்கிறதா என்று பார்ப்போம் பாஸ்!
வரும் இடைத்தேர்தலில் பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து எம்.எல்.ஏ-வைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் யானை எந்தக் கட்சிக்கு மாலையிடும்?
``கலைஞர் கட்டிய சட்டசபையே போதும்; புதிய கட்டடம் எதற்கு?’’ என்கிறாரே எம்.பி கனிமொழி?
தி.மு.க கட்டிய கூட்டணிதான் வேண்டும்; அவர்கள் கட்டிய சட்டமன்றம் வேண்டாம் என்று முதல்வர் நினைக்கிறாரே... என்ன செய்ய?
எடப்பாடி பழனிசாமி கடவுளிடம் என்ன வரம் கேட்பார்?
அ.தி.மு.க-விலிருக்கும் தலைவலிகளிலிருந்து தப்பிக்க, மனம்விட்டு சந்தோஷமாகச் சிரிக்க, `தினமும் அரை மணி நேரம் சட்டசபையை நடத்த வேண்டும்’ என்று வரம் கேட்பார்.
ரஷ்ய அதிபர் புதினுக்குப் பிரதமர் மோடி திருக்குறள் புத்தகம் கொடுத்ததுபோல், ட்ரம்ப்புக்கு என்ன புத்தகம் கொடுக்கலாம்!?
சமீபத்தில், தனது கட்சி வெற்றிபெற்றால் அமெரிக்க மக்களுக்கு 5,000 டாலர் தருவதாக அதிபர் ட்ரம்ப் சொல்லியிருப்பதால், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை புத்தகத்தைப் பரிசாக வழங்கி, அவரை இன்னும் ஊக்கப்படுத்தலாம்.
கழுகாருக்குப் பிடித்த கட்சி?
சட்டசபையின் மாண்பைக் கெடுக்காமல், வதந்தியைக் கிளப்பி சர்ச்சையாக்காமல், அநாகரிகமாகப் பேசி கைதாகாமல், கோஷ்டிச் சண்டைபோட்டு சந்தி சிரிக்காமல், தேர்தல் தோல்விகள் தரும் கவலைகள் இல்லாமல், ஆட்சிக்கு ஆதரவா, இல்லையா என்ற குழப்பமில்லாமல், தான் உண்டு தன் சைக்கிளில் இருக்கும் இரண்டு சக்கரங்கள் உண்டு என இந்தத் தமிழ்கூறும் நல்லுலகத்தில் வாழும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
இன்னொரு முறை இடைத்தேர்தல் வராத அளவுக்கு முடிவுகள் இருக்க வேண்டும்!
‘யாகாவாராயினும் நா காக்க...’ என்றால் என்ன அர்த்தம் கழுகாரே?
தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளைப் பார்த்ததால் அந்தத் திருக்குறளின் அர்த்தமே மறந்துவிட்டது.
சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேஸ் மைதானத்தில் நடிகர் அஜித்தும் முதல்வர் விஜய்யும் ஓடோடி வந்து ஒருவரையொருவர் ஆரத்தழுவிய காட்சியைப் பார்த்தீரா..?
இதென்ன ப்ரோ ஆரத்தழுவல்... கடந்த மே மாதம் ‘தீய சக்திகளை’ ஆரத்தழுவினாரே விஜய், அது ஞாபகமிருக்கிறதா?
``ஆபாசமாகப் பேசுவது தி.மு.க-வின் டி.என்.ஏ-வில் உள்ளது’’ என்கிறாரே அமைச்சர் ரமேஷ்?
‘இதெல்லாம் த.வெ.க-வின் விர்ச்சுவல் வாரியர்ஸுக்கும் பொருந்தும்தானே’ என்று எதிர்க்கேள்வி வருகிறது சாரே...
எல் நினோவின் பாதிப்பு தமிழகத்துக்கும் பெரிய அளவில் இருக்கும் என்கிறார்களே?
அது குறித்தெல்லாம் யாருக்கு, என்ன கவலை... பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டினோமா, லண்டனுக்குச் சென்று கார் பந்தயத்தைப் பார்த்தோமா என்பதில் இருக்கும் திருப்தி, எல் நினோவைப் பற்றிக் கவலைப்பட்டால் கிடைக்குமா?
தமிழகம் கடன் இல்லாத மாநிலமாக மாறிவிட்டது போன்று கனவு கண்டேன்... பலிக்குமா?
காசா பணமா... கனவுக்கு ஏது எல்லை? ஜமாய்ங்க தீட்சண்யா!
தங்கத்துக்குக் கொடுப்பதுபோல அரசியல்வாதிகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கொடுத்தால் என்ன? (பரிசு ரூ.250)
நல்ல ஐடியா. அதேபோல் விலைக்குறிப்பு அட்டையையும் இணைத்தால், ‘தேவையான’ நேரத்தில் நல்ல ரிசார்ட், சோபா கிடைக்காமல் அல்லாடும் நிலை கட்சிகளுக்கு இல்லாமல் இருக்கும்.
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
