Religion
காங்கேயம், வெள்ளகோவிலில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
காங்கேயம்:விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று முன்தினம் காங்கேயம் நகரில் பல்வேறு இடங்களில், 55 சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது.
பிறகு அனைத்து சிலைகளும் காங்கேயம் உடையார் காலனிக்கு கொண்டு வரப்பட்டன. விசர்ஜன ஊர்வலம் மாலை, 4:00 மணிக்கு தொடங்கியது. இந்து முன்னணி கிழக்கு மாவட்ட பொது செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். கோவை கோட்ட செயலாளர் பாலசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் உடையார் காலனியில் துவங்கி நகரின் முக்கிய சாலை வழியாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிலைகளுக்கு பூஜை செய்தனர்.இதேபோல் வெள்ளகோவிலில், 17 சிலைகள் நேற்று மாலை கடைவீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கந்தசாமி, வி.ஹெஹச்.பி., நிர்வாகி ராஜகோபால் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாராபுரத்தில்...
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி அமராவதி சிலை அருகே மதியம், 2:00 மணியளவில் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ., மாநில ஓ.பி.சி., பிரிவு நிர்வாகி ரமேஷ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினர். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது.மேள தாளங்கள் முழங்க இளைஞர்கள் நடனம் ஆடியவாறு, 15க்கும் மேற்பட்ட சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதேபோல் குண்டடத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.