Politics
இடைத்தேர்தல்! கள நிலவரம்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த நிலையில், அடுத்த நாளே தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தி.மு.க.வின் சீனியர்களிடமும் தொகுதிகளடங்கிய மா.செ.க்களிடமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்துக் கேட்டார். பெரும்பாலானோர், த.வெ.க.வுடன் அ.தி.மு.க.வே மோதிக் கொள்ளட்டும். தேர்தலைப் புறக்கணிக்கலாம் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதில் உதயநிதி உடன்படவில்லை.
இந்தச் சூழலில், 9-ஆம் தேதி காலையில் ஸ்டாலினின் வீட்டில் மீண்டும் ஆலோசனை நடந்தது. போட்டியிடலாம், போட்டியிட வேண்டாம் என்கிற ரீதியில் நிறைய கருத்துக்கள் அங்கு வெளிப்பட்டன. "தற்போது நாம் போட்டியிட்டால் 4 முனைப் போட்டி உருவாகும். இதனால் வாக்குகள் பிரியும்போது விஜய்யின் த.வெ.க. எளிதாக ஜெயித்துவிடும். நம் கேடர்ஸ் மத்தியில் ஒரு சோர்வை உருவாக்கும். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இது எதிரொலிக்கும். அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்பதுதான் சரியாக இருக்கும் என வாதிட் டனர். ஆனால், போட்டியிட்டே ஆகவேண்டும்' என அழுத்தமாக வாதம் புரிந்தார் உதயநிதி. இவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் துரைமுருகனும் பேசினார். உதயநிதி பேசியதை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதால் புறக்கணிப்பதைத் தவிர்த்து விட்டு முதல் ஆளாக களத்தில் குதித்துள்ளது தி.மு.க.'' என்கிறார்கள் அறிவாலயத்தைச் சேர்ந்தவர்கள்.
தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தனித் தொகுதியில் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக தி.மு.க. அறிவித்துள்ளது.
மதுராந்தகம், பெரும்பான்மையாக விவசாயத் தையும், கணிசமான அளவு தொழிற்சாலை களையும் கொண்ட தொகுதி. பட்டியல் சமூகத்தினரை பெரும்பான்மையான வாக்கு வங்கியாகக் கொண்ட மதுராந்தகத்தில், வன்னியர் சமூக வாக்குகளும் வெற்றியை தீர்மானிக்கும். ரெட்டியார், முதலியார் மற்றும் நாயுடு சமூக வாக்குகளும் கணிசமாக உள்ளது. கடந்த தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். த.வெ.க.வின் எழில் கேத்ரின் 62,090 வாக்கு களும், தி.மு.க.வின் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் ஜானகிராமன் 4,950 வாக்குகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பாக வெற்றிபெற்ற மரகதம் குமரவேல் ராஜினாமா செய்தது தொகுதி மக்களிடையே அவப் பெயரை ஏற்படுத்தி யுள்ளது.
இப்போது அவர் த.வெ.க.வில் சேர்ந்து த.வெ.க. சார்பாக மீண்டும் களமிறங்கி யிருப்பதை தொகுதி மக்கள் ரசிக்கவில்லை. இவருக்காக அ.தி.மு.க.வினர் இரவுபகலாக வேலை பார்த்து வெற்றிபெற வைத்ததும், ஒரே மாதத்தில் த.வெ.க.வோடு டீலிங் போட்டு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்? என்று தொகுதிக்குள் பரவலாக இவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன், கடந்த 2021 தேர்தலில் எழும்பூரில் வெற்றிபெற்று எழும்பூர் தொகுதி மக்களிடம் நன் மதிப்பை பெற்றவர். அடுத்ததாக, 2026 தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரை மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கியிருப்பது தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் பரந்தாமன், சமீப காலமாக தி.மு.க. சார்பான பத்திரிகையாளர் சந்திப்புகளில் தமிழக வெற்றிக்கழக அரசின் தவறுகளை பாய்ன்ட் பாய்ன்ட்டாக சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய்யையும், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா போன்றோரையும் பொளந்துகட்டுவதை தி.மு.க.வினர் மிகவும் உற்சாகத்தோடு பார்க்கிறார்கள்.
அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் மதுராந்தகம் சட்டமன்ற முன்னாள் எம்.எல்.ஏ. வான கணிதா சம்பத்துக்கு வாய்ப்பளிக்க தலைமை முடிவெடுத்துள்ள நிலையில், முன்னாள் ராஜ்யசபா எம்.பி. தனபால் மகள் காயத்ரி தனபால் தனக்கு வாய்ப்பளிக்கக்கேட்டு தலைமையை சுற்றி வருகிறார். அக்கட்சியின் ஒன்றிய செயலாளரான விவேக் என்கின்ற விவேகானந்தன், மறைமலைநகர் முன்னாள் நகரமன்றத் தலைவர் கோபி கண்ணனும் போட்டியில் உள்ளார். அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதியான மதுராந்தகத்தில் பட்டியல் சமூக வாக்குகள் 35 சதவீதத்திற்கு மேலுள்ள நிலையில், அடுத்துள்ள வன்னியர் சமூக வாக்குகள் பா.ம.க. மூலம் கை கொடுத்தால் அ.தி.மு.க. இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெறலாமென்று கணக்கு போட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த முறை போட்டியிட்ட ஜானகிராமன் மீண்டும் தனக்கு வாய்ப்பை கேட்டுள்ளார். போனமுறை த.வெ.க.வால் வாக்குகள் சரிவடைந்த நிலையில், தற்போது நிலைநிறுத்துவேனென்று உறுதியளித்துள்ளார். கள நிலவரம் மும்முனைப் போட்டியாக உள்ளது.
தாராபுரத்தை தக்கவைக்குமா அ.தி.மு.க.?
அ.தி.மு.க. சத்தியபாமா ராஜினாமாவிற்கு பிறகு இடைத்தேர்தலை கண்டிருக்கிறது தாராபுரம். பொதுவாக தி.மு.க.வில் தனித்தொகுதிகளில் இரண்டு முறைக்கு மேல் யாரும் வெற்றிபெற்றது கிடையாது, அல்லது சீட் கிடைக்காது. பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கிவிடுவார்கள். இந்த முறை வென்று காட்டுகிறோம் எனக்கூறி, தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிலிருந்த கயல்விழி, பாப்பு கண்ணன் மற்றும் டாக்டர் இந்திராணி ஆகியோரை புறந்தள்ளிவிட்டு எதிர்பார்க்காத ஒருவரை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார்கள்.
தி.மு.க. சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர். சட்டமன்றத் தொகுதி யினைப் பொறுத்தவரை இங்கு அருந்ததியர் சமூக மக்கள் கணிசமாக இருந்தாலும், வேட்பாளரின் வெற்றியை தீர்மானிப்பது கொங்கு வேளாள கவுண்டர் சமூக வாக்குகளே. கூடவே தாராபுரம் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், முதலியார், நாயுடு உள்ளிட்டோரும் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதைக் காட்டுகிறது முந்தைய தேர்தல் வரலாறு.
"தாராபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் சுகன்யாவின் கணவர் தி.மு.க.வின் இளைஞரணி நிர்வாகி என்பது முதல் பலம். அவரது கிராமமான தளவாய்பட்டினத்தில்தான் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ண சாமியின் நெருக்கமான உறவினர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணசாமி கூட்டணியில் இல்லை. த.வெ.க.வுக்கு தாராபுரம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் இன்னும் வலுவான அமைப்பு உருவாகவில்லை என்பதே உள்ளூர் நிர்வாகிகளின் கவலை. நகரச் செயலாளர் பொறுப்பு இரண்டு பிரிவுகளாகப் பகிரப்பட்டி ருந்தாலும், இருவருக்கும் தொகுதிக்குள் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை என்கிறார்
கள். நாங்கள் தான் வெற்றிக்கு தகுதியுடையவர்கள். போட்டி என்னவோ எங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் மட்டுமே. தற்போது வரை த.வெ.க. களத்தில் இல்லை'' என்கின்றார் தாராபுரம் நகர ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளரான சிவசங்கர்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை அவர் களுக்கு இது உற்சாகமான தொகுதிதான். எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. ரசிகர்கள் இன்றும் இருக்கும் இளமையான தொகுதி தாராபுரம் என்றால் அது மிகையல்ல! அ.தி.மு.க., தாங்கள் வாங்கிய துரோகச் சூட்டின் வலியை அனுபவித்துவிட்டார்கள். ஆகையால், வெற்றிபெற்றாலும் தங்களை விட்டுப்போகாத வேட்பாளராக இருக்க வேண்டுமென்பது வேட்பாளர் தேர்வை கடினமாக்குகிறது. ஐ.யூ.எம்.எல்., ம.தி.மு.க. வாக்குகள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என த.வெ.க.வும், பா.ஜ.க. வாக்குகள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என அ.தி.மு.க.வும் போட்டிபோட்டு வருகின்றன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை பங்க் மகேஷ், அபிராமி உள்ளிட்டோர் வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர். அதே வேளையில் த.வெ.க. சார்பில், ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்று ராஜினாமா செய்த சத்தியபாமா மீண்டும் களமிறங்கியுள்ளார். தேர்தலில் வென்றபின் அப்பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வுக்கு தாவியது அவருக்கு பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. பலமாகவுள்ள இத்தொகுதியில், த.வெ.க. சார்பாகக் களமிறங்குவதால் இம்முறை இவர் வெல்வது கடினமென்றே கூறப்படுகிறது.
புதுச்சேரியில் ஆதரவு கேட்கும் சி.பி.ஐ!
தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவது போல புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தி.மு.க. சார்பில் சேதுசெல்வம் என்பவரும், ஆளுங் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் என்பவரும் போட்டியிடுகிறார்கள். பொதுத்தேர்தலின்போது த.வெ.க.வுடன் கூட்டணியிலிருந்த நேயம் மக்கள் கட்சியின் சார்பில் விநாயகம் என்பவர் போட்டி யிட்டிருந்தார். அவரே இந்த முறையும் சீட் கேட்கிறார். காங்கிரஸ் சின்னத்தில் போட்டி யிடுவதற்காக டெல்லி காங்கிரஸ் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் சலீம் போட்டி யிடுகிறார். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி புதிதாக உருவாகியுள்ள நிலையில், அதனை கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரிக்கும் சூழலில், புதுச்சேரி இடைத்தேர்தலில் தங்களை ஆதரிக்கும்படி சி.பி.ஐ. சார்பில் விஜய்யிடம் ஆதரவு கோரவுள்ளனர்.
இடதுசாரிகள் தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பது போல், புதுச்சேரி இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆதரவு கேட்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழ் நாட்டில் இரண்டு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதால் அங்கு இடதுசாரிகள் த.வெ.க.வை ஆதரிக்கக்கூடும். அதேபோல் புதுவை தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் சின்னத்தில் நேயம் மக்கள் கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார். இச்சூழலில் காங்கிரஸ்
கட்சி தமிழ்நாட்டுக்கேற்ப முடிவெடுக்குமா, புதுச்சேரிக்கென தனி முடிவெடுக்குமா எனத் தெரியவில்லை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)