Economy, business and finance
தவறான விளம்பரம், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

புதுடில்லி: தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக நடவடிக்கை காரணமாக ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதத்தை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
செல்போன் வழியாக ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் சேவையை அளிப்பதில் ரேபிடோ முன்னணி நிறுவனமாக இருக்கிறது. தற்போது போட்டிகள் அதிகம் நிலவுவதால் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி விளம்பரங்களை ரேபிடோ வெளியிட்டு வருகின்றன.
உத்தரவாதமான பயணம், வாகனம் 5 நிமிடத்திற்குள் வராவிட்டால் ரூ.50 பெற்றுக் கொள்ளலாம் போன்ற அறிவிப்புகளும் இதில் அடக்கம். இந் நிலையில், இந்தியாவில் செயல்படும் வாடகை கார் மற்றும் பைக் டாக்சி ஒருங்கிணைப்பு தளங்களில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்தது.
பல்வேறு தளங்களை ஆய்வு செய்தபோது, பயணி ஒருவரின் முன்பதிவின் போது, ரேபிடோ செயலியில் இருந்து வாடகை அதிகம் செலுத்தினால், பயணம் உறுதியாக கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம், வாகனம் இயக்குவோருக்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.30 வரை சேர்த்து தர வேண்டும் என்று அறிவிப்புகளை நுகர்வோர் ஆணையம் கண்டறிந்தது.
இதையடுத்து, ரேபிடோ முன்பதிவு தளத்தை இயக்கி வரும் ரோப்பன் டிரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதத்தை விதித்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பயணம் தொடங்கும் முன்பே அதற்கான கூடுதல் தொகையை தரவேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.