Crime, law and justice
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு துாக்கு; இருவருக்கு சிறை: போக்சோ கோர்ட் அதிரடி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சின்னகுட்டி என்பவருக்கு துாக்கு தண்டனை, முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை, முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்தார்.
2022ல் சிறுமி படித்த பள்ளியில் பெயிண்ட் அடிக்கும் பணிக்கு விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் 26, வந்தார். ஏற்கனவே திருமணமானதை மறைத்து, சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பழகினார். 2022 அக்டோபரில் சிறுமியை மேலப்பாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வந்த கீழவீரராகவபுரத்தை சேர்ந்த சின்னகுட்டி 28, முருகேசன் 23, ஆகியோர் சிறுமியை முனீஸ்வரனிடம் இருந்து பிரித்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
சம்பவம் குறித்து சிறுமி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. தகவலறிந்த போலீசார், குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் பெற்று விசாரணை நடத்தி மூவரையும் கைது செய்தனர். விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் கைதான மூவரும் குற்றவாளிகள் என சில தினங்களுக்கு முன் நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். நேற்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.
இதில் சின்னகுட்டிக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சின்னகுட்டிக்கு ரூ.12 ஆயிரமும், மற்ற இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜரானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, முத்துலட்சுமி, நாககுமாரி மற்றும் போலீஸ் ரேணுகா ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் சேகர் தேஷ்முக் பாராட்டினார்.
2025 முதல் 4 பேருக்கு துாக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 2025 முதல் இதுவரை 28 போக்சோ வழக்குகளில் 29 குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கியுள்ளன.
இதில் 2025ல் சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை, 2026 மார்ச்சில் குறிச்சியை சேர்ந்த ஆனந்தசேகர், ஆக.20ல் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் ஆபிரகாம் ஆகியோருக்கு துாக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது சின்னகுட்டிக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே 2025 முதல் இதுவரை 4 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பாலியல் வழக்குகளில் இதுவரை 10 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.