Crime, law and justice
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: ஒருவருக்கு தூக்கு, இருவருக்கு சிறை.. நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிளஸ் 2 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
நெல்லை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அதேபகுதியில் உள்ள தேவாலயத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (27) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இரண்டு வாரங்களாக செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது அக்கா வீட்டிற்குச் செல்லலாம் என திருமண ஆசை வார்த்தை கூறி முனீஸ்வரன் சிறுமியை தனது பைக்கில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். தன்னை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் முனீஸ்வரன் அழைத்து வந்ததாக மாணவி நினைத்திருந்தார். ஆனால் சிறுமியை முனீஸ்வரன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் அங்கு முனீஸ்வரனின் நண்பர்களான நெல்லை, கொக்கிரகுளம், கீழ வீரராகவபுரத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி (27), முருகேசன் (27) ஆகியோர் இருந்தனர். அவர்களும் மாணவியை கட்டாயப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதில் சின்னக்குட்டி மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் முனீஸ்வரன், சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுரேஷ்குமார் உறுதிபட அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: 12 துறை அதிகாரிகளே பொறுப்பு.. விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரை
இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கோ அல்லது சாட்சிகளுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் வரக்கூடாது என்பதற்காகவும், அவர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காகவும் 3 பேரையும் உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்களை நீதிமன்றம் இன்று 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாகவும் நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து இன்று காலை மீண்டும் வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் நீதிபதி தண்டனை விபரங்களுடன் தீர்ப்பளித்தார்.
அதன்படி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சின்னக்குட்டிக்கு தூக்கு தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டும் முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.
