Crime, law and justice
நெல்லை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: ஒருவருக்கு மரண தண்டனை; இருவருக்கு சிறை!
நெல்லையில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...
நெல்லையில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லையில் பிளஸ் 2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர்களுக்கான தண்டனை விவரத்தை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
இதில் முக்கிய குற்றவாளியான சின்னக்குட்டிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் முனீஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முருகேசனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கான அபராத தொகை பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நெல்லையில் உள்ள தேவாலயத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றபோது, விளாத்திகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து இருவரும் செல்போன் மூலம் சுமார் இரண்டு வாரங்களாக பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது அக்கா வீட்டிற்கு செல்லலாம் என்றும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி முனீஸ்வரன் சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில்தான் முனீஸ்வரன் அழைத்துச் செல்வதாக மாணவி நம்பியிருந்த நிலையில், காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
அங்கு முனீஸ்வரனின் நண்பர்களான நெல்லை கொக்கிரகுளம், கீழ வீரராகவபுரத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி மற்றும் முருகேசன் ஆகியோரும் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனீஸ்வரன், சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில் சின்னக்குட்டி மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 4-ம் தேதி மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கும், வழக்கின் சாட்சிகளுக்கும் குற்றவாளிகள் தரப்பில் இருந்து அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காகவும் 3 பேரையும் உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று 3 பேரும் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து வழக்கின் தண்டனை விவரத்தை நீதிபதி சுரேஷ்குமார் அறிவித்தார்.
சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட சின்னக்குட்டிக்கு மரண தண்டனையும், முனீஸ்வரனுக்கு சிறுமியை கடத்தியதற்கு 3 ஆண்டுகள் உள்பட 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முருகேசனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
மேலும், 3 பேருக்கான அபராத தொகை தொடர்பான விவரமும் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, 3 பேரையும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள கைதிகள் காத்திருப்பு அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைத்தனர்.
நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நீதிமன்ற வளாகத்திலும், நெல்லையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gang rape of Class 12 student: Death sentence for one; imprisonment for two
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.