Politics
அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் லேப்டாப், பென்-ட்ரைவ் ஆகியவை பறிமுதல் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. லேப்டாப், பென்-ட்ரைவ் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனை குறித்தும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி, பல கோடி மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், சென்னை மற்றும் திருச்சியில் சொத்து ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், பல்வேறு நபர்களிடம் விசாரணை செய்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இன்று (16.09.2026) அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னையில் 2 இடங்கள் மற்றும் திருச்சியில் 2 இடங்கள், இவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்மந்தமாக 118 ஆவணங்கள், -18, Laptop-3, Pendrive-8, Desktop (inbuild Hard Disk)-2, Tablet-1, Apple I pad -1 கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து, விசாரணை செய்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

