Politics
அன்பில் மகேஷ் அலுவலகத்தில் ஆவணங்கள் சிக்கின!: தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சம் வாங்கியதாக வழக்கு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறப்பட்ட புகாரில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் மீது, ஊழல் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அவரது வீடு, அலுவலகம் என, சென்னை மற்றும் திருச்சியில் பல இடங்களில் நேற்று, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசில் நாளை ஆஜராகுமாறு மகேஷுக்கு, 'சம்மன்' அளிக்கப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், கட்டுமான அனுமதிகள் பெறுவதில் முறைகேடு நடந்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இளங்கோவன் என்பவர் புகார் அளித்தார்.
விசாரணையில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டதாக, தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அரசகுமாரை கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தனர். இந்த வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் உட்பட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை, 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட 177 தனியார் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தொடர்பு உடையவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இவற்றில் அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கி கணக்குகள் மற்றும் முத்துகுமாருடன் தொடர்புடைய 29 வங்கி கணக்குகளில் நடந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான சரிபார்ப்பு விசாரணை நடந்து வருகிறது.
கைதானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் அமைத்துள்ள டி.பி.ஐ., வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இதில், குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள், பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள், மொபைல் போன்கள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டறியப்பட்டதால், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, சென்னை மற்றும் திருச்சியில் மகேஷுக்கு சொந்தமான நான்கு இடங்கள், அவரது உதவியாளரான வாளாடி கார்த்திக் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் , மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள மகேஷ் வீடு, தி.நகரில் உள்ள அலுவலகங்கள், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது உதவியாளர் கார்த்திக் வீடு போன்றவற்றில் நடந்த சோதனைகளில், மடிக்கணினி மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, திருச்சி தென்னுார் அண்ணாநகரில் உள்ள மகேஷ் வீட்டில், காலை 7:00 மணிக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையை தொடங்கினர். அப்போது, வீட்டில் மகேஷ் இருந்தார். வீட்டுக்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
தகவலறிந்த தி.மு.க.,வினர், அவர் வீட்டின் முன் திரண்டனர். முன்னாள் அமைச்சர் நேரு, வழக்கறிஞர்கள் அங்கு வந்தனர். கட்சியினர் கூச்சலிட்டதால், மகேஷ் அமைதிப்படுத்தினார். பின், மகேஷ் பயன்படுத்தி வந்த காரிலும் போலீசார் சோதனை நடத்தினர். இச்சோதனை, மாலை 3.30 மணிக்கு முடிந்தது.
இந்த சோதனையில், இரண்டு கம்ப்யூட்டர்கள் மற்றும் சில டிஜிட்டல் ஆவணங்களை, போலீசார் கைப்பற்றினர். மகேஷ் வீட்டில் சோதனை நடந்த அதேநேரம், அவரது உறவினர் கார்த்தி என்பவருக்கு சொந்தமான, திருச்சி, பெரியார் நகர் வீடு மற்றும் லால்குடி அருகே உள்ள தத்தனுார் வீடு, முன்னாள் உதவியாளர் அருணின், அரியமங்கலம் விஸ்வாஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு போன்ற இடங்களிலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை, மாலை 4:00 மணிக்குள் முடிவடைந்தது.
இதற்கிடையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி, மகேஷுக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

