இந்திய திறன் போட்டி 15ம் தேதி கடைசி நாள்
திருப்பூர், செப். 7– ‘இந்திய திறன் போட்டி – 2027’ல் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள
‘இந்திய திறன் போட்டி – 2027’ல் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ‘இந்திய திறன் போட்டி – 2027’ நடத்துகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஐச்சி நகரில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள உலக திறன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் திறமையான இளைஞர்களை தேர்வு செய்வதற்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது.
பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், இளம் தொழில்முனைவோர் இதில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் 16 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உற்பத்தி மற்றும் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் கட்டட தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், படைப்பாற்றல் கலை மற்றும் பேஷன், சமூகம் மற்றும் தனிநபர் சேவை உள்ளிட்ட 6 துறைகளில், 60க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி கடைசி நாள்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இணையதளம் https://skilldevelopment.tn.gov.in/tnskills-ஐ பார்வையிடலாம்.
