‘இந்தியா திறன்’ போட்டிக்கு வரும் 15க்குள் விண்ணப்பம்
சென்னை: உற்பத்தி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை அலங்காரம் உள்ளிட்ட திறன் சார்ந்து நடத்தப்படும், ‘இந்தியா திறன்’ போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ – மாணவியர், வரும் 15ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய அரசின் ஆதரவில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால், 2026 – 27ம் ஆண்டிற்காக, இந்தியாவின் முதன்மை திறன் போட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 – 26ம் ஆண்டுக்கான இந்தியா திறன் தெற்கு மண்டல போட்டியில், தமிழகம் முதலிடம் பிடித்தது. இதில் 30 தங்கம், 32 வெள்ளி, 29 வெண்கலம் மற்றும் 17 சிறப்புப் பதக்கங்கள் என மொத்தம் 108 பதக்கங்களை தமிழகம் வென்றது.
தேசிய அளவிலான போட்டியிலும் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து, 12 தங்கம், 7 வெள்ளி, 15 வெண்கலம் மற்றும் 12 சிறப்புப் பதக்கங்கள் என மொத்தம் 46 பதக்கங்களை குவித்தது.
அந்த வகையில் 2026 – 27ம் ஆண்டிற்காக போட்டியில் பங்கேற்க தகுதி வாய்ந்த கல்லுாரி மற்றும் திறன் பயிற்சி நிறுவன மாணவ – மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளோர் https://skilldevelopment.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில், வரும் 15ம் தேதிக்குள் விண்ண்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.