Arts, culture, entertainment and media
“விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை” - தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பரபரப்பு பேட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்” என்று தெரிவித்தார்.
“விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை. விஜய் சேதுபதி பேசுவதால் அரசியல் மாறிவிடாது!” என தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விமர்சித்தார்.
“விஜய் சேதுபதி அரசியல் விமர்சனம் செய்ய கருத்துரிமை உண்டு; ஆனால் பெயரை குறிப்பிட்டு பேசட்டும். நாங்கள் பதில் சொல்வோம், மக்களும் பதில் சொல்வார்கள்” என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் செரையம்பாளையம் – நீலாம்பூர் இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்கி வைத்து எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்து கேள்விக்கு பதில் அளிக்கையில், “பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. விஜய் சேதுபதி 2 ஆண்டுகளுக்கு முன் மகாராஜா படத்தில் நடித்தார். அதற்கு முன் அவரது நிலை எப்படி இருந்தது? அவருடைய கட்டங்கள் எப்படி இருக்கிறது என்று நான் கணித்து தெரிவித்திருந்தேன். அதன் பிறகு எப்படி மாறியிருக்கிறது? பிக்பாஸ் மூலம் சுமார் 80 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் என்பது கண்டிப்பாக வேலை செய்திருக்கிறது. ஆனால், அவர் குறிப்பிட்ட சில கட்சியினரிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார். அந்த தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. உள்நோக்கத்துடன் பேசவில்லை எனக் கூறினாலும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல பிழைப்புக்காக அப்படி பேசியுள்ளார். என்னைப் பொறுத்தவரை, இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் தனது பிழைப்பிற்காகச் செய்கிறார்.” என்று விமர்சித்தார்.
விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு நிறுத்திவிட்டால் அவருக்கு நன்றாக இருக்கும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய கனிமொழி சந்தோஷ், “குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம். எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசட்டும். அதற்கு மக்கள் தங்களுடைய பதிலைச் சொல்வார்கள்.” “ஒரு நிகழ்ச்சியில் பொதுவாக பேசப்படும் கருத்துகளை அரசியல் ரீதியாக மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அரசியல் விமர்சனம் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர், ““விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை. அவர் பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்” என்று தெரிவித்தார்.
“இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கவுண்டம்பாளையம் தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: Bigg Boss 10 Tamil | பிக்பாஸ் டாஸ்க்கில் அதிர்ச்சி.. லட்சுமி பிரியா தள்ளியதில் மயக்கமடைந்த ஆனந்தி.. என்னாச்சு?
“அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நேரடியாக காணும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் தங்களது முடிவுகளை எடுப்பார்கள்” என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
