மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

வானுார்: சாலை படுமோசமாக மாறி விட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் அடுத்த ஒழிந்தியாப்பட்டில் இருந்து கீழ்புத்துப்பட்டு செல்லும் சாலைக்கு இடையில், கொடூர் எல்லை சந்திப்பில் இருந்து ராயப்புதுப்பாக்கம் செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது.
2 கி.மீ., துாரம் அமைந்துள்ள இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
குறிப்பாக ராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் இருந்து ஒழிந்தியாப்பட்டு, கிளியனுார், திண்டிவனம் பகுதிக்கும், காலாப்பட்டு, கீழ்புத்துப்பட்டு போன்ற பகுதிகளுக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தற்போது சாலையில் கருங்கற்கள் பெயர்ந்து படுமோசமாக காட்சி அளித்து வருகிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மெகா சைஸ் பள்ளங்களில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையை புதுப்பிக்க கோரி அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.