Religion
நாளை மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்; செப்., 20 வரை கட்டண தரிசனம் இல்லை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இன்று அதிகாலை, 5:00 மணி முதல், 6:00 மணிக்குள் இதர தெய்வ சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பாபிஷேகம் முடிந்ததும், பக்தர்கள் ஒரே நேரத்தில் மேல்தளத்தில் இருந்து கீழே வருவதை தவிர்க்க, பகுதி பகுதியாக விடப்பட உள்ளனர்.
இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்து, கோவிலில் இருந்து பக்தர்கள் வெளியே வருவதை கணக்கிட்டு, நாளை காலை, 10:00 மணி வரை சித்திரை வீதிகளில், பாஸ் இல்லாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ''குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் குற்றத்தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளின் முகத்தை மொபைல் போனில் அடையாளம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
கும்பாபிஷேகத்தன்று துாய்மை பணிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து 1,000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கீழவெளிவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில், 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக ஐந்து தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை அரசு மருத்துவமனை சார்பில், செப்., 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செப்., 17 முதல் 20 வரை, கட்டண தரிசனம் கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.