Politics
முதல்வர் விஜய் குறித்து அவதுாறு: திமுக மாஜிக்கள் 3 பேர் மீது வழக்கு

சென்னை: தமிழக முதல்வர் விஜயை கண்டித்து, தி.மு.க.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதுாறாக பேசியதாக, த.வெ.க.,வினர் அளித்த புகார் அடிப்படையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா ஆகியோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டசபையில் கடந்த 7ம் தேதி காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை அறிக்கை, 'மிசா' சட்டத்தில் கைது ஆகியவற்றை சுட்டிக்காட்டி, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.
மிசா காலத்தில் ஸ்டாலின் கைதானது குறித்து விஜய் பேசியபோது, அவர் வெளிப்படுத்திய உடல்மொழி, ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் இருந்ததாக தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டினர். அதை தொடர்ந்து, விஜய் பேச்சை கண்டித்து, தி.மு.க., சார்பில், கடந்த 12ம் தேதி தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆ.ராஜா பேசுகையில், 'எமர்ஜென்சி காலத்தில் கைதான ஸ்டாலின், சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார். ஆனால், ஸ்டாலின் அதற்காக கைதாகவில்லை; இதற்காக கைதாகவில்லை என, அமைச்சர் ஒருவர் பேசுகிறார்.
'அவர் மரத்திற்கு மரம் தாவுவது போல், ஏழு கட்சிகள் தாண்டி, இங்கே வந்து உளறுகிறார். 'தனி மனித குற்றங்களை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக பார்க்கக்கூடாது' என்கிறார் முதல்வர்; இவரெல்லாம் முதல்வரா' என, கடுமையாக விமர்சித்தார்.
இதுபோல், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் குறித்து, தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான சேகர்பாபு பேசியது, த.வெ.க.,வினரை கொந்தளிக்க வைத்தது.
மேலும், கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய் குறித்து, ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பேசியதும் சர்ச்சையானது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, தான் பேசியதை திரும்பப் பெறுவதாக ஆ.ராஜா அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்து, ஆ.ராஜா, சேகர்பாபு, வசந்தம் கார்த் திகேயன் ஆகியோர் தரம் தாழ்ந்தும், அவமதிக்கும் வகையிலும், வன்முறையை துாண்டும் வகையிலும் பேசியதாக, காவல் துறையில் த.வெ.க., நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், ஆ.ராஜா மீது, சைதாப்பேட்டை போலீசார், ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார், சேகர்பாபு மீது, ஆபாசமாக பேசுதல், வன்முறையை துாண்டும் வகையில் நடந்து கொள்தல் உட்பட ஆறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வசந்தம் கார்த்திகேயன் மீது, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய போலீசார், முதல்வரை அவமதித்தல், ஆபாச வார்த்தை பயன்படுத்தியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது, தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.