Politics
“பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை சகிக்க முடியவில்லை” - ஆ.ராசாவுக்கு பெ.சண்முகம் கண்டனம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
குறிப்பாக திமுக தலவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது, மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று (12-09-26) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, மிசா குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசினார்.
அப்போது அமைச்சர் நிர்மல்குமாரை இழிவுப்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசினார். அதில் பேசிய ஆ.ராசா, “ஒரு மந்திரி இருக்கிறார். அவர் மந்திரியா? எங்கே படித்தார் என்னவென்று தெரியவில்லை. குரங்கு மரத்துக்கு மரம் தாவுகிற மாதிரி கட்சிக்கு கட்சி தாவி தாவி இங்கு உட்கார்ந்திருக்கிறார். அவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்கிறார். எனக்கும் தான் ஒரு சந்தேகம் இருக்கிறது, நீ யாருக்கு பொறந்தே என்று?” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும். சில திமுகவினர் கண்ணியம் தவறுவது தொடர்கிறது. கட்டுப்பாடு நிலை நிறுத்தும் கடமையை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)