Politics
தனி அணியாக களம் காணும் இடதுசாரிகள் : “கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது” - தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களால் காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 06 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எந்தவொரு முக்கியக் கூட்டணிகளுடனும் இணையாமல், இடதுசாரி கட்சிகள் தங்களுக்குள் ஒரு தனி அணியாக இணைந்து களம் காண முடிவு செய்துள்ளன. அதன்படி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் , மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு தொகுதிகளுக்கான தங்களது வேட்பாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கத்திலிருந்தே, த.வெ.க. ஆட்சிக்கு மட்டும்தான் ஆதரவு; நாங்கள் தனித்தே இயங்குவோம் என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்தே கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
இப்போதும் அவர்கள் தெளிவுபடக் கூறியிருக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு. அதிலே எந்தத் தயக்கமும் இல்லை, ஐயமும் இல்லை. ஆனால், இடைத்தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். இப்படிப் போட்டியிடுவதனால் இது தவெகவுக்கு எதிரான நிலைப்பாடு என்றோ, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ கருதத் தேவையில்லை. ஏனென்றால், இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி அமைப்பதற்கான ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இல்லை. இதைக் கொண்டு ஆட்சியைத் தீர்மானிக்கப் போவதில்லை. எனவே, இந்தத் தேர்தலை நாங்கள் தனித்துச் சந்திக்கிறோம் என்று அவர்கள் விளக்கம் கூறியிருக்கிறார்கள். அது அவர்களுக்கான சுதந்திரம், அவர்களுக்கான உரிமை. அது எந்த வகையிலும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)