Arts, culture, entertainment and media
டெல்லியிலிருந்து குஜராத்.. 72 ஆண்டுகளில் முதன்முறை.. தேசிய திரைப்பட விருதுகள் இடமாற்றம் ஏன்?

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, கடந்த 72 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக புதுடெல்லியில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றியதற்குப் பிரபலத் திரைப்பட இயக்குநர் ராகுல் தோலகியா உள்ளிட்ட சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய விருதாக மத்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள் உள்ளன. இது, 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் கிட்டத்தட்ட 72 ஆண்டு காலமாக தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22 அன்று, குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற 'ஒற்றுமையின் சிலை' (Statue of Unity) வளாகத்தில் நடைபெற இருக்கிறது. 'ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்' திட்டத்தின் கீழ், தேசிய அளவிலான முக்கிய விழாக்களைத் தலைநகர் டெல்லியைத் தாண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டுசெல்லும் புதிய கொள்கை முடிவின்படி இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 1,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் வகையில், ஏக்தா நகர் வளாகத்தில் மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசு சார்பில் பிரம்மாண்டமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளார். 2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு இவ்வாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.
தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புள்ள சிறந்த படம் என்ற பிரிவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படமு மற்றும் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் ஆகியன சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவை டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றியதற்குப் பிரபலத் திரைப்பட இயக்குநர் ராகுல் தோலகியா உள்ளிட்ட சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். டெல்லிக்கு வெளியே நடத்துவதாக இருந்தால், இந்திய சினிமாத்துறைக்கு அதிக பங்களிப்பை அளித்த தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா அல்லது ஹைதராபாத் போன்ற இடங்களைத் தேர்வு செய்திருக்கலாமே தவிர குஜராத் அல்ல என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.