Economy, business and finance
த.வெ.க., - எம்.எல்.ஏ., அடிதடி வழக்கில் விடுதலை

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகரில், 2016ல் ஆட்டோ ஓட்டுநர் வேல்முருகனை தாக்கிய வழக்கில், விருதுநகர் த.வெ.க., -- எம்.எல்.ஏ., செல்வம் உட்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
விருதுநகரைச் சேர்ந்தவர் வேல்முருகன், அவரது உறவினர் திவாகர். இருவருக்கும் குடும்ப பிரச்னை இருந்தது. 2016 செப்., 8ல், ஆட்டோ ஸ்டாண்டில் வேல்முருகன், தன் அண்ணன் ராஜ்குமாருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திவாகர், அவரது நண்பரான தற்போதைய த.வெ.க., -- எம்.எல்.ஏ., செல்வம், பால மகேந்திரன், பாலகர்ணன் ஆகிய, நால்வர் இரும்பு கம்பியால், வேல்முருகனை தாக்கினர். விருதுநகர் போலீசார், நால்வர் மீதும் வழக்கு பதிந்தனர்.
விருதுநகர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், செல்வம் எம்.எல்.ஏ.,வானார். விசாரணை, ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையில், பெரும்பாலான சாட்சிகள், பிறழ் சாட்சியளித்தனர். நேற்று இந்த வழக்கில், நால்வர் விடுதலை செய்து, நீதிபதி சுபாஷினி உத்தரவிட்டார்.