Economy, business and finance
ஆட்டோ டிரைவரை தாக்கிய வழக்கில் த.வெ.க., எம்.எல்.ஏ. உட்பட 4 பேர் விடுதலை
ஸ்ரீவில்லிபுத்துார்: 2016ல் விருதுநகரில் ஆட்டோ டிரைவர் வேல்முருகனை தாக்கிய வழக்கில் விருதுநகர் த.வெ.க., எம்.எல்.ஏ., செல்வம் உட்பட 4 பேரை விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.விருதுநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வேல்முருகன். இவரது உறவினர் திவாகர்.
இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது.
2016 செப்.8 இரவு ஆட்டோ ஸ்டாண்டில் வேல்முருகன் தனது அண்ணன் ராஜ்குமாருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திவாகர், அவரது நண்பரான தற்போதைய த.வெ.க., எம்.எல்.ஏ., செல்வம், பால மகேந்திரன், பாலகர்ணன் ஆகிய 4 பேர் இரும்பு கம்பியால் வேல்முருகனை தாக்கினர். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் செல்வம் எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். இதையடுத்து வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணையில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சியளித்தனர்.
இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுதலை செய்து நீதிபதி சுபாஷினி உத்தரவிட்டார்.