Politics
அமெரிக்காவே எங்களை காப்பி அடிக்கிறது: சொல்கிறார் கர்நாடக முதல்வர்

பெங்களூரு:''அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த, வாக்காளர்களுக்கு 5,000 டாலர் திட்டம், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் நகலாகும்,'' என, அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் குடியரசு கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும், 5,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 4.79 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் மாநாட்டில் அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.
இந்த அறிவிப்பை மேற்கோள் காட்டி, காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று கூறியதாவது:
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீஹார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள், கர்நாடகாவின் நலத்திட்டங்களை பின்பற்றிய நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பும், பின்பற்ற தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் காங்கிரசின் நலத்திட்டங்கள் நம் நாட்டை கடந்து உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளதை காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியின் கோட்பாடுகளும், அரசியல் கொள்கைகளும் உலகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில், 2023ல் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, இலவச மின்சாரம், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.