Politics
DECODE | "எனக்கு வாக்களியுங்கள் 5,000 Dollars தருகிறேன்!" - டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு!

அமெரிக்காவில் நடைபெறும் இடைத்தேர்தலில், குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்தது ஏன்? DECODEல் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தக்க வைத்துக் கொண்டால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஐந்தாயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்) வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார் அதிபர் டிரம்ப். இதற்கு அவர் "டிரம்ப் டிவிடெண்ட்" (Trump Dividend) என்றும் பெயரிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் 4 ஆண்டு பதவிக் காலத்தின் 2வது ஆண்டில் நடைபெறும் தேசிய அளவிலான தேர்தலே அங்கு இடைத் தேர்தல் எனப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான House of Representatives மற்றும் Senate உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவே இத்தேர்தல் நடக்கிறது. House of Representatives சபையில் மொத்தமுள்ள 435 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலில் தேர்தல் நடைபெறும். இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள்.
Senate சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில், 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். செனட்டர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். 36 மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலும் இதனுடன் இணைத்து நடத்தப்படும்.
இடைத் தேர்தல்கள் ஏன் மிகவும் முக்கியமானது?
அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதில் இடைத் தேர்தல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிபர் ஒரு கட்சியையும் நாடாளுமன்றப் பெரும்பான்மை எதிர்க்கட்சியிடமும் இருந்தால், அதிபரால் புதிய சட்டங்களையோ அல்லது வரவு செலவுத் திட்டங்களையோ எளிதில் நிறைவேற்ற முடியாது. அதிபரின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சி, பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து மக்கள் அளிக்கும் Referendum தான் இந்த இடைத் தேர்தல்.
நாடாளுமன்றத்தைக் கைப்பற்றும் கட்சி, அதிபரின் நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தவும், சட்ட திட்டங்களை முடக்கவும் அதிகாரம் பெறும். செனட், House of Representatives என இரு சபைகளிலும் தற்போதைக்கு டிரம்பின் குடியரசுக்கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தி வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. பல்வேறு கருத்துக்கணிப்புகளின்படி டிரம்ப் நிர்வாகத்திற்கான Approval Rating 30 சதவிகிதமாகச் சரிந்துள்ளது.
2024 தேர்தலில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த டிரம்ப், அதை நிறைவேற்றத் தவறிவிட்டதாக 70%-க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கருதுகின்றனர். பெட்ரோல் விலை கேலனுக்கு 5 டாலர்களை தாண்டியதால், சாமானிய மக்களின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் குடும்ப நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
80%-க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இந்தப் போர் தங்களை நீண்டகால பாதிப்புக்கு உள்ளாக்கும் எனக் கருதுகின்றனர். போரினால் ஏற்பட்ட Oil Shock உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ளது. மற்ற நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள கடுமையான இறக்குமதி வரிகள் மற்றும் பொருளாதாரக் கெடுபிடிகள், Boomerang ஆகி உள்நாட்டில் விலை ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 75%-க்கும் அதிகமான மக்கள் அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கருதுகின்றனர்.
நாடு பொருளாதாரச் சிக்கலில் இருக்கும்போது, டிரம்பின் வணிகங்கள் மற்றும் எண்ணெய் பங்குகளின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியானதால், அவர் சுயநல அரசியலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். 2024 தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளித்த இளைஞர்கள், Latino Voters, நடுநிலை வாக்காளர்கள் ஏராளமானோர் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.
அமெரிக்க மக்களிடையே நிலவும் இந்த அதிருப்தியே, "ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் டாலர்கள் தருகிறேன்" என்பது போன்ற அதிரடி வாக்குறுதிகளை அளிக்க டிரம்பைத் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய மொத்த தேசியக் கடன் 40 புள்ளி 6 ட்ரில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 3,800 லட்சம் கோடி ரூபாய். வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் கடன் 40 ட்ரில்லியன் டாலர்களை தாண்டி எதிர்மறை சாதனையை படைத்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கடன் அளவு 125 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தை விட அதிகம்.
இந்த கடனுக்காக அமெரிக்க அரசு செலுத்தும் ஆண்டு வட்டி மட்டுமே ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகம். இது அந்நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான Budget-க்கு நிகரானது. வரி மூலம் அரசுக்கு வரும் வருவாயை விட சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ நலத்திட்டங்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈரான் உடனான போர் மற்றும் பாதுகாப்புச் செலவு பட்ஜெட் பற்றாக்குறையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இப்படி அமெரிக்காவை வரலாற்றில் இல்லாத வகையில் கடன் சூழலில் தள்ளிவிட்டுள்ள டிரம்ப் இடைத் தேர்தல்களில் ஓட்டு வாங்க ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஐந்தாயிரம் டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த "டிரம்ப் டிவிடெண்ட்"-க்கான செலவு குறைந்தது ஒரு ட்ரில்லியன் டாலர்களை தாண்டும். ஏற்கனவே நாட்டின் கடன் 40 புள்ளி 6 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ள நிலையில், இந்த ஒரே ஒரு ரொக்கச் சலுகைத் திட்டம் நாட்டின் கடனை ஒரே நாளில் 3 புள்ளி 3 சதவிகிதம் அதிகரிக்கும்.
சந்தையில் திடீரென இவ்வளவு பெரிய பணப்புழக்கம் நுழைந்தால், பொருட்களுக்கான தேவை அதிகரித்து Hyper-Inflation Risk-யை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அரசிற்கு புதிய வருவாய் ஆதாரம் இல்லாமல் இந்த பணத்தை அச்சடித்தோ அல்லது கடன் வாங்கியோதான் தர முடியும். இது அமெரிக்கப் பொருளாதாரத்தை மேலும் Debt trap-ல் தள்ளும். இதனால்தான், இந்த 5,000 டாலர் வாக்குறுதி என்பது நடைமுறைச் சாத்தியமில்லாத ஒரு தேர்தல் நேர கவர்ச்சி வாக்குறுதி என பொருளாதார ஆய்வாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் அமெரிக்க அரசு வழங்கிய 1,200 டாலர்கள் மற்றும் 1,400 டாலர்கள் நிதியுதவிகளாலேயே பணவீக்கம் அதிகரித்ததாக விமர்சனம் உள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் டாலர்கள் என்பது மிக ஆபத்தான முன்னுதாரணம் என்றும் கூறப்படுகிறது. டிரம்பின் இந்த ஐந்தாயிரம் டாலர் pitch-க்கு முக்கிய காரணம் இடைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு தான். அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதிநிதிகள் சபையை பொறுத்தவரை, "குடியரசுக் கட்சியை விட ஜனநாயகக் கட்சி 5 சதவிகித வாக்குகள் அதிகம் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
செனட் சபையில் மொத்தம் 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இங்கு இரு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இடைத்தேர்தல்களில் அதிபரின் ஆளும் கட்சி தோல்வியடைவது வழக்கமான நிகழ்வு தான். அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது Midterm Curse என்று கூட அழைக்கப்படுகிறது. 1934-க்குப் பிறகு நடந்த 23 இடைத்தேர்தல்களில், 20 முறை அதிபரின் ஆளும் கட்சி பிரதிநிதிகள் சபையில் தோல்வியை தழுவியுள்ளது.
அதிபரின் Approval Rating 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும்போது, ஆளும் கட்சி பிரதிநிதிகள் சபையில் சராசரியாக 37 இடங்களை இழந்துள்ளது. டிரம்பின் Approval Rating அதளபாதத்திற்கு சென்றுள்ளதால் தான் அவர் பதறுகிறார்... இந்த பதற்றத்தின் காரணமாக தான் அவர் Election Perks அறிவித்துள்ளார். டிரம்பின் முழு அரசியல் பலமும் "தோற்கடிக்க முடியாத தலைவர்" என்ற பிம்பத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசியலில் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை எதிர்க்கட்சி கைப்பற்றிவிட்டால், அதிபரின் கைகள் முற்றிலுமாக கட்டப்பட்டுவிடும். 2028 வரை எஞ்சியிருக்கும் 2 ஆண்டுகால பதவிக் காலத்தில், டிரம்ப் சொந்தமாக ஒரு முடிவு கூட எடுக்க முடியாமல் 'Lame Duck President'-ஆக மாற நேரிடும். பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றும் கட்சிக்கு, அரசின் நிர்வாகம் மற்றும் அதிபர் மீது விசாரணை நடத்தும் சப்பீனா (Subpoena) அதிகாரம் கிடைக்கும்.
தற்போது பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி அதிக இடங்களை பிடித்தால், பிரதிநிதிகள் சபையின் முக்கிய விசாரணைக் குழுக்களின் தலைவர்களாக ஜனநாயகக் கட்சியினர் பொறுப்பேற்பார்கள். இந்தக் குழுக்களின் தலைவர்களுக்கு டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான சப்பீனா (Subpoena) ஆணைகளைப் பிறப்பிக்கும் சட்டப்பூர்வ உரிமை கிடைத்துவிடும். டிரம்பின் தனிப்பட்ட வணிகம், ஈரான் போர் தொடங்கப்பட்டதற்கான பின்னணி, பங்குச்சந்தை தொடர்புகள், அரசு பதவியைப் பயன்படுத்தி லாபம் அடைந்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த இந்த Subpoena அதிகாரம் பயன்படும்.
டிரம்பைப் பொறுத்தவரை, குடியரசுக் கட்சிக்குள் அவரது அதிகாரம் ஓங்கியிருக்க அவர் தேர்தல்களில் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இத்தேர்தலில் கட்சி தோற்றால், "டிரம்பைக் காட்டி இனி வாக்காளர்களைக் கவர முடியாது" என்ற எண்ணம் குடியரசுக் கட்சி தலைவர்களுக்கே வந்துவிடும். கட்சிக்குள்ளேயே டிரம்பிற்கு எதிரான மாற்றுக் குரல்களும், 2028 அதிபர் தேர்தலுக்கான புதிய தலைவர்களின் எழுச்சியும் தொடங்க வாய்ப்பு ஏற்படும்.
இந்த இடைத்தேர்தல் என்பது குடியரசுக் கட்சிக்கான தேர்தல் மட்டுமல்ல; டிரம்பின் எஞ்சிய பதவிக்காலம், அவரது அரசியல் எதிர்காலம் மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த தேர்தல். இதனால்தான் அவர் வழக்கத்திற்கு மாறான பதற்றத்தில் இருக்கிறார். "டிரம்ப் டிவிடெண்ட்" என்ற ஐந்தாயிரம் டாலர் வாக்குறுதி என்பது சரிந்து வரும் ஆதரவு வீதத்தை மீட்டெடுக்க டிரம்ப் ஆடியுள்ள ஒரு பிரம்மாண்டமான அரசியல் சூதாட்டம். பிரதிநிதிகள் சபையையோ அல்லது செனட்டையோ எதிர்க்கட்சி கைப்பற்றினால், டிரம்பின் எஞ்சிய 2 ஆண்டுகால ஆட்சி முடக்கப்படுவதுடன், பல்வேறு சட்டப்பூர்வ விசாரணைகளுக்கும் அவர் பதிலளிக்க வேண்டி வரும்.
"தோற்கடிக்க முடியாத தலைவர்" என்ற பிம்பத்தைத் தக்கவைக்கவும், தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் டிரம்ப் போராடி வரும் நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமெரிக்காவின் உள்நாட்டுக் கொள்கைகளை மட்டுமன்றி, உலகளாவிய புவிசார் அரசியலையும் மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டதாக உருவெடுத்துள்ளது.
