Politics
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமனும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9ஆம் தேதி தொடங்கி 16-ம் தேதி நிறைவடையும் எனவும், வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 16-ம் தேதியும் எனவும், வாக்குப் பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "அதிமுகவில் ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்..." - அமைச்சர் நிர்மல்குமார்
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், பி.ஏ.பி.எல்., (தி.மு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யா, எம்.ஏ.பி.எல். ஆகியோர் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளார்.
முன்னதாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. நாளை மாலை வரை தலைமை அலுவகத்தில் விருப்ப மனு பெற்று அளிக்கலாம் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வரும் 13ஆம் தேதி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இரண்டு தொகுதிகளிலும் நான்கு முனை போட்டி ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
