Arts, culture, entertainment and media
மாஜி அமைச்சர் மகன் கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வடகாடு கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அ.வெங்கடாசலத்தின் மகன், தன் சகோதரனை பட்டப்பகலில் வெட்டிக்கொன்றது அம்மாவட் டத்தையே பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
வெங்கடாசலத்துக்கு ஒருமுறை கட்சி சீட்டு கொடுக்காதபோது அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து ஆலங்குடி, திருமயம் ஆகிய 2 தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிட்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
புதுக்கோட்டையை சுற்றியுள்ள மாவட்டங் களில் செல்வாக்கு பெற்றவராக இருந்த வெங்கடாசலம், கடந்த 2010-ஆம் ஆண்டு அ.தி.மு.க. தலைமையில் நிழலாக இருந்தவருக்காக அவரது உறவினர்கள் மூலம் புதுக்கோட்டை புலிவலம் கிராமத்தில் 207 ஏக்கர் சொத்து வாங்க அக்ரிமெண்ட் போட்டு ரூ.10 லட்சம் கொடுத்து அக்ரிமெண்ட் காலம் முடிந்தும் சொத்தை பத்திரப்பதிவு செய்யாமல் ஏமாற்றிய சம்பவத்தில் தலையிட்டு அ.தி.மு.க. தலைமையின் நிழல் நபருக்கு கிடைக்காமல், வேறு நபருக்கு மாற்றிவிட்டதால் ஏற்பட்ட பகையில் 2010, அக்டோபர் 7-ஆம் தேதி மாலை, வடகாட்டில் அவரது வீட்டில் வைத்தே வெங்கடாசலம் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார்.
அந்த வழக்கை அப்போதைய அ.தி.மு.க. அதிகாரமையமாக இருந்தவர்களின் தயவிலிருந்த காவல் அதிகாரி, வெங்கடாசலம் கொலைக்கு காரணம், பஞ்சாயத்தில் ஒருவரை செருப்பால் அடித்ததால், அடிபட்டவர் மகன் கோபத்தில் வெட்டிவிட்டான் என்று ஆவணங்களை வைத்து நீர்த்துப்போக வைத்து அதிகார மையத்தை காப்பாற்றினார். இந்த வெங்கடாசலமும், இதேபோல படுகொலை செய்யப்பட்ட திருச்சி கே.என்.ராமஜெயமும் நெருக்கமான கூட்டாளிகள். வெங்கடாசலத்தின் சொந்த ஊரில் விநாயகர் கோயில் கட்ட தேவையான கருங்கல்களை ராமஜெயம் கொடுத்திருந்தார். அந்த அளவுக்கு நட்பாக இருந்தனர். அந்த கோயில் திருப்பணி நடந்தபோதுதான் வெங்கடாசலம் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வெங்கடாசலம் மகன்கள்தான் ராஜபாண்டியன், ராஜராஜன். சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இவர்களுக்குள் பிரச்சனை நிலவிவந்தது. இந்தப் பிரச்சனையால் வெங்கடா சலத்தின் பென்ஷன் பணத்தைக்கூட யார் வாங்கு வது என்று இன்னும் வாங்கமுடியாமல் மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்தான் அவரது மகன்கள் ராஜபாண்டியன் (அ.தி.மு.க. ஜெ. பேரவை மாநில துணைச்செயலாளர்), ராஜராஜனுக்கு ஒதுக்கிய ஓட்டு வீட்டில் ராஜராஜன் குடும்பத்தை இருக்கவிடாமல் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டைப் பூட்டியதால் ராஜராஜன் மனைவி, குழந்தைகளுடன் பல நாட்கள் வீட்டு வாசலில் கிடந்தவர்கள் வடகாடு காவல் நிலையம், ஆலங்குடி டி.எஸ்.பி. அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். நடவடிக்கை எடுக்காததால் எஸ்.பி. அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜபாண்டியனை ராஜராஜன் டிராக்டரைவிட்டு மோதிய சம்பவம் நடந்தது. அதனால் இவர்களுக்கிடையே பகைமை அதிகமானது. சமீபத்தில் நீதிமன்றம் சென்று வீட்டுச் சாவியைப் பெற உத்தரவுபெற்ற ராஜராஜன் புதன்கிழமை சாவியை வாங்கி வியாழக்கிழமை காலை வீட்டை சுத்தம் செய்தபோது, ராஜபாண்டியன் அவரது தம்பியான ராஜராஜனை விரட்டிச் சென்றபோது, தப்பிக்க ஓடி ஒரு வீட்டிற்குள் நுழைந்தவரை கழுத்து, நெஞ்சில் கத்தியால் குத்தி கீழே விழுந்ததும் எரிவாயு சிலிண்டரை தூக்கிப் போட்டுக் கொன்றுவிட்டு ராஜராஜனின் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது போலீசார் கைதுசெய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜபாண்டியன் மற்றும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர் களை கைதுசெய்யக் கோரி ராஜராஜனுக்கு நெருக்கமானவர்கள் சாலைமறியல் செய்தனர். ராஜபாண்டியனை கைதுசெய்த தகவலறிந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. ஆனால் மற்றவர்களை கைதுசெய்யக் கோரி சடலத்தை எடுக்கவிடாமல் நிறுத்திவைத்தனர். மாவட்ட எஸ்.பி. ரவீந்திரகுமார் குப்தா பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
இந்நிலையில் ராஜராஜன் மனைவி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாண்டியன் மற்றும் அவரது அம்மா லெட்சுமி, மனைவி சுவிதா (அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளர்), ராஜபாண்டியன் சகோதரிகள், அவர்களின் குடும்பத்தினர் என 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த வடகாடு போலீசார் ராஜபாண்டியன், சுவிதா, லெட்சுமி ஆகிய 3 பேரை கைதுசெய்துள்ளனர்.
அனைவரையும் கைதுசெய்யவேண்டும் என்று கோரி சடலத்தை வாங்கமறுத்த உறவினர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராஜராஜன் சடலத்தைப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகள் செய்து வீட்டு வாசலில் புதைக்கமுயன்றனர். ஆனால் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மறைந்த வெங்கடாசலம் நினைவிடம் அருகிலேயே அவரது மகன் ராஜராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து உறவினர்கள், "சொத்துக்காக தன் தம்பியைக் கொல்லுமளவுக்கு துணிந்து விட்டனர். சொத்துப் பிரச்சனை ஏற்பட்டபோது அவரது பங்காளிகள் உறவினர்கள் பேசியும் எந்த பலனும் இல்லை. பலமுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோதும் நடவடிக்கை எடுக்காததால் இன்று இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இனிமேலும் இதுபோல நடக்காமல் தடுக்கவேண்டும்''’என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)