Religion
கே.ஆர்.பி., அணை செட் அமைத்து விநாயகர் சிலை வைத்து வழிபாடு

கிருஷ்ணகிரி,:கே.ஆர்.பி., அணை செட் மற்றும் குகை போன்ற செட் அமைத்து அதில் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஹிந்து முன்னணி சார்பில், 1,780 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி நகரில், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 83 இடங்களில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் முன், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், 4 லட்சம் ரூபாய் செலவில், கே.ஆர்.பி., அணை மற்றும் செல்லியம்மன் மார்க்கண்டேயன் சுவாமி கோவில் மாட்டு வாயில் இருந்து தண்ணீர் வருவது போன்று, அதில் விநாயகர் வலை வீசி மீன் பிடிப்பது போன்று அமைத்திருந்தது, மக்களை வெகுவாக கவர்ந்தது.
அதேபோல், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திருவள்ளுவர் தெருவில், அப்பகுதி இளைஞர்கள், 3வது ஆண்டாக, 3 லட்சம் ரூபாய் செலவில், குகை அமைத்து, பிரமாண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர்.