Politics
“தெனம் தெனம் செத்து செத்து பிழைக்கிறோம்!”
எங்கள் பிள்ளைகள் மேல்நிலைப் பள்ளி, கல்லூரிப் படிப்புக்கு கும்பகோணம், திருவையாறு போறாங்க. உடம்பு சரியில்லைன்னா தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்குப் போவோம்.

பாலத்துக்காக பல ஆண்டுகளாக ஏங்கும் கிராமம்
கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே தனித்தீவுபோல அமைந்துள்ள மேலராமநல்லூர், கீழராமநல்லூர் கிராம மக்கள், ஒரு உயர்மட்டப் பாலத்துக்காக 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறார்கள். “பாலம் இல்லாததால், ஆற்றுக்குள் இறங்கி நடந்தே வெளியுலகை அடையும் நிலை தொடர்கிறது” என்கிறார்கள் வேதனையுடன்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், அழகியமணவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த இரு கிராமங்களிலும் 2,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல், கரும்பு, வாழை, காய்கறிகள், பூக்கள் என விவசாயம் செழிக்கும் பகுதி. ஆனால், கொள்ளிடம் ஆறு நான்கு புறமும் சூழ்ந்திருப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை, பெரும் போராட்டமாக இருக்கிறது.
இந்தக் கிராமங்களை அரியலூர் பகுதியுடன் இணைக்கும் வடக்குக்கரையில் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், தஞ்சாவூர் - கும்பகோணம் பகுதிகளை எளிதாக இணைக்கும் தெற்குக்கரையில் பாலம் இல்லாததே மக்களின் நீண்டகாலப் பிரச்னையாக உள்ளது. இதனால் கும்பகோணம், தஞ்சாவூர் செல்லவேண்டிய மக்கள், தண்ணீரில் இறங்கி நடந்து ஆற்றைக் கடக்கின்றனர். மாணவர்கள் புத்தகப்பைகளைத் தலையில் சுமந்து செல்கின்றனர். சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் ஆண்கள் மாற்று உடைகளை எடுத்துச் செல்கின்றனர். பெண்கள், முதியோர், நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
“ஆபத்து தெரிஞ்சுதான் ஆத்தைக் கடக்குறோம்!”
கொள்ளிடம் ஆற்றில் இறங்கி நனைந்தபடி தான் நாமும் அந்தக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். கரையிலேயே நம்மை வரவேற்ற மேலராமநல்லூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான கோ.சுப்ரமணியன், “எங்க ஊர்ல எல்லாம் இருக்கு... பாலம் மட்டும் இல்லை. அதனால தெனம் தெனம் செத்து செத்துப் பிழைக்கிறோம். மறைந்த ஜெயலலிதா முதல்வரா இருந்தப்ப, 2016-ல முதற்கட்டமா அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வடக்குப் பகுதியில உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் தெற்குப் பகுதியில பாலம் கட்டப்படும்னு சொன்னாங்க. ஆனா, இப்பவரைக்கும் வேலை ஆரம்பிக்கலை.
எங்கள் பிள்ளைகள் மேல்நிலைப் பள்ளி, கல்லூரிப் படிப்புக்கு கும்பகோணம், திருவையாறு போறாங்க. உடம்பு சரியில்லைன்னா தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்குப் போவோம். காய்கறிகளை கும்பகோணம் மார்க்கெட்டுல விக்கிறோம். வடக்குக்கரை பாலம் வழியா சுத்திக்கிட்டு போனா, சுமார் 20 கி.மீ வரைக்கும் கூடுதலா பயணிக்கணும். நேரமும் செலவும் அதிகம். அதனால, ஆபத்து தெரிஞ்சுதான் தெற்கு பக்கமா ஆத்தைக் கடக்குறோம்” என்றார்.
ஆற்றைக் கடக்க, கட்டிலும் கொப்பறையும்!
அந்த ஊரைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர், “2019-ல தற்காலிகமா இயந்திரப் படகு வசதி ஏற்பாடு செஞ்சாங்க. பாலம் சீக்கிரம் வரும்னு சொன்னாங்க. ஆனா, ஒரு தடவை ஆத்துல போனப்ப தண்ணி அதிகரிச்சு படகு கவுந்து நாலு பேர் செத்துட்டாங்க. அதுக்கப்புறம் படகு சேவையையும் நிறுத்திட்டாங்க. திரும்பவும் ஆத்துல இறங்கி நடக்குறதுதான் எங்களோட விதியாகிடுச்சு” என்றார் வேதனையுடன்.
காய்கறி வியாபாரியான அரியத்தங்கம், “எங்க ஊர்ல இருந்து 200-க்கும் அதிகமானவங்க கும்பகோணத்துக்கு, காய்கறி வியாபாரத்துக்குப் போறோம். சுத்திக்கிட்டுப் போறதைவிட, மூட்டைகளைத் தலையில தூக்கிக்கிட்டு ரிஸ்க்கோடதான் ஆத்தைக் கடக்குறோம். தண்ணி அதிகமா இருக்குறப்ப உடம்பு சரியில்லாதவங்களை நெல் அவிக்குற கொப்பரையில உக்காரவெச்சு மூணு பேரு தூக்கிக்கிட்டுப் போவாங்க” என்றார்.
திருவையாறு கல்லூரியில் படிக்கும் ராஜேஸ்வரி, “எங்க ஊரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறுல படிக்கிறோம். தெனமும் ஆத்தைக் கடக்கும்போது டிரெஸ் ஈரமாகிடும். ஈரமான டிரெஸ்ஸோட பஸ்ல போறது ரொம்ப அவஸ்தையா இருக்கு...” என்றார்.
“அறிவிக்கப்பட்ட நிதி என்னாச்சு?”
தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன், “தெற்கு பகுதியில உயர்மட்டப் பாலம் கட்ட பழனிசாமி முதல்வராக இருந்தப்ப ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டதா சொன்னாங்க. பின்னர் தி.மு.க ஆட்சியில ரூ.82 கோடி நிதி ஒதுக்கப்படும்னு அறிவிச்சாங்க. ஆனா, இதுவரை ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வெக்கலை. ரெண்டு ஆட்சியிலயும் அறிவிக்கப்பட்ட நிதி என்னாச்சுன்னு தெரியலை. அதைத் தெளிவுபடுத்தணும்” என்றார். பால கோரிக்கையை வலியுறுத்தி கொள்ளிடம் ஆற்றுக்குள் தேசியக் கொடியுடன் இறங்கி கவன ஈர்ப்பு போராட்டமும் நடத்தியிருக்கிறார்.
தஞ்சாவூர் மண்டல நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மேற்பார்வை பொறியாளர் முரளிதரன் கூறுகையில், “இதற்கு முன்பு பாலம் கட்டுவதற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. தற்போது பாலம் தொடர்பான ஆய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. அவை முடிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும்” என்றார்.
இது தொடர்பாக பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஷாஜகானிடம் கேட்டபோது, “பொதுப்பணித்துறை அமைச்சரிடம் இதை முக்கியக் கோரிகையாக வைத்திருக்கிறேன். அவரும் உடனே பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். விரைவில் மேலராமநல்லூர் மக்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்” என்றார்.
மக்களின் குமுறலுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?
