Politics
கொள்ளிடத்தில் பாலம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் குடிகாடு, அரியலுார் மாவட்டம் மேல ராமநல்லுாரை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:
கொள்ளிடம் ஆறு திருச்சி ஸ்ரீரங்கம் காவிரியில் பிரிகிறது. அரியலுார் மாவட்டத்தின் திருமானுார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வழியாக பாய்கிறது. மேலராமநல்லுார், கீழராமநல்லுார் ஆகியவை திருமானுார் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு கிராமங்கள்.
மேலராமநல்லுாரிலிருந்து அரியலுாரை இணைக்கும் பாலம் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் குடிகாடு கிராமத்தை இணைக்க மேம்பாலம் இல்லை. கபிஸ்தலம், பாபநாசம் செல்ல மக்கள் படகு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். 2019ல் படகு கவிழ்ந்ததில் 4 பேர் இறந்தனர்.
குடிகாடு, மேல ராமநல்லுாரை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். நீதிபதிகள் தமிழக நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை முதன்மை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.7 க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.