Crime, law and justice
மாஜி மீதான முறைகேடு வழக்கு மத்திய அரசுக்கு ஐகோர்ட் கெடு

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான, டெண்டர் முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை, இரண்டு மாதத்துக்குள் முடித்து, தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார்.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலை பணிகள் மேற் கொள்ள, உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, வேலு மணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில், குற்றப்பத் திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பு செயலர் சுஷீல்குமார் படேல் ஆஜாரானார்.
அவரிடம், ''ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கந்தசாமி, விஜய கார்த்திகேயனுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க, ஏன் இவ்வளவு காலதாமதம்,'' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படும். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் அனுப்பப்பட்டுள்ளன. ஆணையம் அளிக்கும் பதில், அடுத்த வார இறுதியில் கிடைக்கும்.
அதன்பின், அந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். வழக்கு தொடர்வதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்துக்கே உள்ளது. இந்த நடைமுறைகள் முடிவடைய, இரண்டு மாதமாகும். அதன்பின், காலமதாமதம் ஏதுவும் ஏற்படாது. இந்த விவகாரத்தில் அனுமதி வழங்கும் நடைமுறையை முடிக்க, முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ''இந்த விவகாரத்தில், 2025 நவம்பர் முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை விளக்கி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
''ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை முடித்து, அந்த முடிவை தமிழக அரசுக்கு, மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.
விசாரணையை, நவ., 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.