Crime, law and justice
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் வழக்கில், 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை 2 மாதத்தில் முடிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதத்துக்குள் முடித்து, தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக் வந்தபோது, இந்த முறைகேடு தொடர்பாக இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய விவகாரத்தில், மத்திய அரசுக்கு விளக்கம் அளித்து கடந்த ஜூலை 22ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காணொளி காட்சி மூலம் ஆஜராகியிருந்த மத்திய அரசின் பணியாளர் துறை இணைச் செயலாளர் சுஷீல் குமார் பாட்டீலிடம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க ஏன் இவ்வளவு கால தாமதம் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சுஷீல் குமார், வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன; அவற்றை ஆய்வு செய்யக் கால அவகாசம் தேவைப்படும்; மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் அனுப்பப்பட்டுள்ளன; ஆணையம் அளிக்கும் பதில் அடுத்த வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; அதன்பின் அந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்; வழக்கு தொடர்வதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்துக்கே உள்ளது; இந்த நடைமுறைகள் முடிவடைய இரண்டு மாத காலங்கள் ஆகும்; மேற்கொண்டு காலமதாமதம் ஏதும் ஏற்படாது என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அனுமதி வழங்கும் நடைமுறையை முடிக்க முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர் அனுமதி வழங்கும் நடைமுறை தொடர்பாக 2025ஆம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை விளக்கி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை முடித்து, அந்த முடிவை தமிழக அரசுக்கு தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தது உத்தரவிட்டார்.
