Lifestyle and human interest
யாருக்கும் அஞ்சாமல் பயணிக்கும் உண்மையை உரக்க பேசும் தினமலர் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெருமிதம்
சென்னை: ''தேசியம், தெய்வீகம் என்ற கோட்பாடுகளில் இருந்து இம்மியளவும் விலகாமல், 'தினமலர்' பயணித்து வருகிறது,'' என, 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
'தினமலர்' பவள விழா சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்; அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த 1951 செப்டம்பர் 6ம் தேதி பிறந்த தினமலருக்கு, இன்றுடன் 75 வயது நிறைவடைகிறது. தேசியம், தெய்வீகம் என்ற கோட்பாடுகள் உருவாக்கிய பாதையில் இருந்து இம்மி அளவும் விலகாமல், 75 ஆண்டுகளாக 'தினமலர்' பயணித்து வருகிறது.
தேசியம் என்றால் தேசபக்தி. தேசத்தின் நலனை முன்னிலைப்படுத்துவது; தேசத்தின் ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்துவது. தெய்வீகம் என்றால் தெய்வ பக்தி; தெய்வ வழிபாட்டை ஊக்குவிப்பது; தர்மத்தை கடைப்பிடிப்பது; மக்களை தர்மத்தின் பக்கம் திருப்புவது.
தேசபக்தியும், தெய்வ பக்தியும் சவாலானவையா என்ன? எந்த ஒரு தேசத்திலும், இந்த கோட்பாடுகள் கொண்டாடப்படும். ஆனால், பாரதத்தில் வேறு எந்த பிராந்தியத்திலும் இல்லாத, அசாதாரணமான அரசியல் சூழலே, தமிழகத்தில் நிலவி வந்துள்ளது.
அது, கடந்த 60 ஆண்டுகளாக தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் கேள்விக்குறியாக்கி, சவாலான கோட்பாடுகளாக மாற்றியது. தேசபக்தி பேசுபவர்கள், தமிழர்களுக்கு எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். தெய்வபக்தி பேசுபவர்கள், பிற்போக்கானவர்களாக சித்தரிக்கப்பட்டனர்.
இருப்பினும், 'தினமலர்' அவற்றில் இருந்து விலகாமல், அரசியல் ஆதாயம் தேடாமல், எங்கள் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வகுத்த பாதையில், யாருக்கும் அஞ்சாமல் பயணித்திருக்கிறது; உண்மையை உரைத்து பேசியிருக்கிறது.
அதற்கு காரணம், எங்களுக்கு பின்னால், எங்களின் லட்சோப லட்சம் வாசகர்கள் இருக்கின்றனர் என்ற தைரியம்; வாசகர்களாகிய நீங்கள் கொடுக்கும் தைரியம்.
தபால் தலை வெளியிட்டு, மத்திய அரசு கொடுக்கும் இந்த அங்கீகாரம், 'தினமலர்' நாளிதழுடையது மட்டுமல்ல.
எங்களுடன் சேர்ந்து பயணித்து, எங்களுக்கு தைரியமூட்டும் உங்களுக்கும் இந்த அங்கீகாரம் உரித்தானது என்பதை உரக்கச்சொல்லி, எங்கள் முதலாளிகளான உங்களை, நிறைந்த நெஞ்சுடன் வரவேற்கிறோம்.
தபால் தலையை வெளியிட்டு, சிறப்புரையாற்ற வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், 'தினமலர்' வாசகர் என்பதில் பெருமை கொள்கிறோம். திருப்பூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு, அவர் பிறந்த போது, துணை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பெயரை, அவரது பெற்றோர் சூட்டினர்.
கடந்த 1952 முதல் 1962ம் ஆண்டு வரை, துணை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போல, இப்போது, மரியாதைக்குரிய சி.பி.ராதாகிருஷ்ணனும், அந்த பதவியை அலங்கரிக்கிறார்.
அவருக்கும், 'தினமலர்' நாளிதழுக்குமான பந்தம், 40 ஆண்டு கால பந்தம். தேசாபிமானியான அவர், தேசாபிமான நாளிதழிலான 'தினமலர்' நாளிதழ் பயணத்தில் முத்திரை பதிக்கும் இந்த தபால் தலையை வெளியிடுவது, சாலப் பொருத்தமானது.
'தினமலர்' நாளிதழின் நாட்டுப் பற்றுக்கும், மக்கள் பணிக்கும் இதை விட வேறு அங்கீகாரம் வேண்டாம்.
உலக பெருமை வாய்ந்தது நம் தேசத்தின் தபால் துறை. நம் தேசத்தில் முத்திரை பதிக்கும் முக்கிய விஷயங்களை குறிக்க, அழகான தபால் தலைகளை வெளியிட்டு, தபால் தலை சேகரிப்போரின் ஆர்வத்தை துாண்டிக் கொண்டே இருக்கிறது.
தகவல் தொடர்பில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும், தபால் துறையின் நீல நிற 'இன்லேன்ட்' லெட்டரும், மஞ்சள் அட்டையும், மக்கள் மனதில் இருந்து மாறவில்லை.
இந்த, 'வாட்ஸாப்' உலகிலும், 'தினமலர்' அலுவலகத்திற்கு, கட்டுக்கட்டாக தபால் அட்டைகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவாக, சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது தபால் துறை.
டி.வி.ராமசுப்பையர் நிறுவிய 'தினமலர்' ஆலமரமாக உயர்ந்து, அறிவு கிளை பரப்பும் இந்த நேரத்தில், 'தினமலர்' நாளிதழின் 75வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில், சிறப்பு தபால் தலை வெளியிடும் தபால் துறைக்கு, 'தினமலர்' நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
பாரதம் வல்லரசாக வேண்டும்; தமிழர்கள் வாழ்வு மேம்பட வேண்டும்; தமிழ் என்றும் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்று எங்கள் நிறுவனர் ஆசைப்பட்டார். அதை நோக்கியே 'தின மலர்' பயணித்து வருகிறது; பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.