Politics
ரூ.1 கோடி லஞ்சம்.. காட்டு நிலத்துக்கு பட்டா.. வனத்துறையினர் மீது அதிரடி நடவடிக்கை

மலைவாழ் மக்களிடம் இருந்து பணம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாட்டம் ஜவ்வாது மலையில், காட்டு நிலத்தை பட்டா செய்து தருவதாக கூறி, மலைவாழ் மக்களிடம் பணம் வசூலித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள். ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், வனச்சரக அதிகாரிகள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாமை, தினை, வரகு, தேன், பலாப்பழம் உள்ளிட்டவற்றை பயிரிட்டு, அதை விற்று வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காட்டு நிலங்களை மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட வனத்துறையினர், காட்டு நிலத்தை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், பணம் கொடுத்தால் அந்த நிலங்களுக்கு பட்டா செய்து தருவதாக கூறி மலைவாழ் மக்களிடம் பணம் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இதில் ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் ஆகிய 3 வனச்சரகங்களைச் சேர்ந்த வனச்சரக அலுவலர்கள் பிரபு, சுரேஷ், செங்குட்டுவன் உள்ளிட்ட 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், வனக்காவலர் முத்து மற்றும் வனவர்கள் அருணகிரி, சுப்பிரமணி ஆகியோரும் மலைவாழ் மக்களிடம் இருந்து பணம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகர் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் அடிப்படையில், லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்ட 3 வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட 6 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மலைவாழ் மக்களை மிரட்டி, வன நிலங்களுக்கு பட்டா வழங்குவதாக கூறி லஞ்சம் பெற்ற, வனத்துறை அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் வனத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
