Politics
மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் - வனச்சரகர்கள் 3 பேர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பென்ட்
திருவண்ணாமலை ஜவ்வாதுமலை பகுதியில் வனநிலத்தை பட்டா போட்டு தருவதாகக் கூறி மலைவாழ் மக்களிடம் லஞ்சம் வசூலித்ததாக புகார். 6 வனத்துறையினர் சஸ்பெண்ட்.

திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் அரசுக்கு சொந்தமான காட்டு நிலத்தை தனி நபருக்கு பட்டா செய்து தருவதாக கூறி மலைவாழ் மக்களை மிரட்டி 1 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக 3 வனச்சரக அலுவலர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் சுமார் 262 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஜவ்வாது மலை பகுதி அமைந்துள்ளது, இந்த மலைப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இலட்சக்கணக்கான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஜவ்வாது மலையில் வாழும் மலைவாழ் மக்கள் சாமை, திணை, வரகு, தேன், பலாப்பழம் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து அருகே உள்ள மாவட்டங்களுக்கு விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் ஜவ்வாது மலை ஒட்டி உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் நிலங்கள் அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டு நிலங்களை சுமார் 3 தலைமுறைக்கும் மேலாக அனுபவித்து வந்தால் அந்த இடத்தை தனி நபருக்கு பட்டா வழங்க உரிமை உள்ளதாக வனத்துறையில் சட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் நிலத்திற்கு அருகாமையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டு நிலத்தை பல ஆண்டுகாலமாக அனுபவித்து வந்துள்ளனர், இதனை அறிந்த வனத்துறையினர் வனத்துறைக்கு சொந்தமான காட்டு நிலத்தை பயன்படுத்தியவர்களை அழைத்து உங்கள் மீது வழக்கு பதியப்படும் என்றும், இல்லையென்றால் எங்களுக்கு பணம் கொடுங்கள் உங்களுக்கு நாங்கள் பட்டா செய்து தருகிறோம் என்று மலைவாழ் மக்களை வனத்துறையினர் மிரட்டி உள்ளனர்.
இந்த நிலையில் மூன்று வனசரக அலுவலர்களான பிரபு, சுரேஷ், செங்குட்டுவன், மற்றும் வனக்காவலர் முத்து, வனவர்கள் அருணகிரி மற்றும் சுப்பிரமணி உள்ளிட்ட ஆறு பேர் வனத்துறைக்கு சொந்தமான காட்டு நிலத்தை தனிநபருக்கு பட்டா செய்து தருவதாக கூறி 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனி நபர் ஒருவர் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு புகார் கொடுத்ததன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதாக கூறி லஞ்சம் பெற்ற மூன்று வனசர அலுவலர்கள் உள்ளிட்ட 6 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.