சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கு விற்றவர் கைது
ஆவடி: சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகள் விற்று, மோசடிக்கு உடந்தையாக இருந்த தெலுங்கானா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அம்பத்துார், ஒரகடத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் பொன்ராஜ், 65. கடந்த 2024ம் ஆண்டு அக்., மாதம், மர்ம நபரிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ஆண்ட்ரூஸ் பொன்ராஜ், 25.60 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பின், ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் ஆவடி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான போலீசார், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிவா சங்கர் என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர், பள்ளி நண்பர் நிட்டா மல்லேஷ் என்பவரிடம், வங்கி கணக்கை கொடுத்தது தெரிந்தது. நிட்டா மல்லேஷை கைது செய்து விசாரித்ததில், சமூக வலைத்தளத்தில் பழக்கமான மர்ம நபரிடம், தன் வங்கி கணக்கு உட்பட ஏழு பேரின் வங்கி கணக்கை விற்று, ‘கமிஷன்’ பெற்றது தெரிந்தது. அந்த ஏழு வங்கி கணக்குகளும், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார், மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை விற்று தரகராக செயல்பட்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நிட்டா மல்லேஷ், 25 என்பவரை, நேற்று கைது செய்தனர்.