முதியவரிடம் ரூ.25.60 லட்சம் மோசடி :உடந்தையாக இருந்த வாலிபர் கைது
அம்பத்துார்: முதியவரிடம் ரூ.25.60 லட்சம் மோசடி செய்த கும்பலுக்கு, வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து உதவிய, தெலுங்கானாவைச் சேர்ந்த வெமுலா சிவசங்கர், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்துார், ஒரகடத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் பொன்ராஜ் வைரமணி, 65. கடந்த மாதம், ஆவடி போலீஸ் கமிஷனரக, இணைய வழி குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன், மொபைல்போன் வாயிலாக என்னை தொடர்பு கொண்ட நபர், தெலுங்கானா மாநில சி.பி.ஐ., அதிகாரி என கூறினார். நான் சட்டவிரோத பண பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், வங்கி கணக்கை முடக்கி என்னை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்யப்போவதாகவும் மிரட்டினார்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, என் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் எனக்கூறி, மூன்று வங்கி கணக்குகளை அனுப்பினார். அதை நம்பி 25.60 லட்சம் ரூபாயை, அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினேன்.
பிறகு என்னை தொடர்பு கொண்ட அந்நபர், விசாரணைக்கு பின், மூன்று நாட்களுக்குள், அந்த பணம் என் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறினார். ஆனால், பணம் திருப்பி வழங்கப்படவில்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
புகார் குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான போலீசார், மூன்று வங்கி கணக்குகளில் ஒன்று, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தது என தெரிந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்று, வெமுலா சிவசங்கர் என்பவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.
அவர், மோசடி நபர்களுக்கு தன் வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து உதவியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.