மேல்பாக்கம் சாலை வளைவில் இரும்பு தடுப்பு சேதம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

உத்திரமேரூர்:மேல்பாக்கம் கிராமத்தில், சாலை வளைவில் சேதமடைந்துள்ள இரும்பு தடுப்புகளை சீரமைக்2காததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். களியாம்பூண்டி - மேல்பாக்கம் சாலையை பயன்படுத்தி அனுமந்தண்டலம், இளநகர், பெருநகர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மேல்பாக்கம் கிராமத்தில், ஆபத்தான சாலை வளைவு உள்ளன. இங்கு, சாலையில் செல்லும் வாகனங்கள் நிலைத் தடுமாறி, சாலையோர பள்ளத்தில் விழுவதை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், இரும்பு தடுப்புகள் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சேதமடைந்து சரிந்துள்ளது. மேலும், இரவு நேரங்களில், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, சாலையோர பள்ளத்தில் விழும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோரத்தில், சேதமடைந்துள்ள இரும்பு தடுப்புகளை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.