Crime, law and justice
ரூ.70,000 அரசு சம்பளம்.. வேலைக்குப் போகாத டாக்டர்? சிக்கிய MLA மருமகள்!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டே தனியார் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் உறவினர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ உமேஷ் மேட்டி. இவரது மருமகள், டாக்டர் அங்கிதா யார்கல். இவருடைய தந்தை ராஜ்குமார் யார்கல் மாவட்ட சுகாதார அதிகாரியாக உள்ளார். இந்த நிலையில், பாகல்கோட்டில் உள்ள அரசின் 'நம்ம கிளினிக்' (Namma Clinic) மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிய டாக்டர் அங்கிதா யார்கல், அதன்மூலம் மாதம் ரூ.75,000 வரை சம்பளமும் பெற்று வந்துள்ளார். இதற்கிடையே, தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி (Pathology) படிப்பையும் படித்து வந்துள்ளார்.
இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, அரசுப் பணியை ராஜினாமா செய்யாமலும், உரிய அனுமதி பெறாமலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி படிப்பை முழுநேரமாகப் படித்து வந்ததும், மேலும் பல மாதங்களாக மருத்துவமனைக்குச் செல்லாமல் தொடர்ந்து சம்பளம் பெற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிதா யார்கல் ஒப்பந்தப் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுப் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.