Politics
புது தலைமை செயலகத்திற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பை... � சமாளிக்குமா அரசு?:அமைச்சர், அதிகாரிகள் குழு அமைத்து பேச்சு நடத்த முடிவு

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்திற்காக, பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களின் வகைப்பாடு மாற்றம் குறித்து, பொதுமக்கள், 21 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது. அதேநேரம், இந்த திட்டத்திற்கு, பட்டினப்பாக்கம் மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, அவர்களிடம் பேச்சு நடத்தி சமாதானம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தமிழக அரசின் சட்டசபை, தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. இட நெருக்கடி உள்ளதால், 1,200 கோடி ரூபாய் செலவில், புதிய தலைமை செயலக வளாகத்தை, பட்டினப்பாக்கத்தில் கட்ட, த.வெ.க., அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, பட்டினப்பாக்கம் லுாப் சாலையில் வீட்டு வசதிவாரியம், சென்னை மாநகராட்சி, வருவாய்துறை ஆகியவற்றிற்கு சொந்தமான, 25.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
புதிய தலைமை செயலகத்தை, ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க முதல்வர் விஜய் விரும்புகிறார். அதற்கேற்ப பணிகளை விரைவுப்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுமான பணிக்கு பொதுப்பணித்துறை வாயிலாக, விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட உள்ளது. கட்டட வடிவமைப்பு பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இதற்காக, சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை, புதிய தலைமை செயலக திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து நிலத்தை பெறுவது தொடர்பாகவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகளுக்கு குழு அமைக்கவும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் வகைப்பாட்டை மாற்றம் செய்ய வேண்டும் என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., விடம், வீட்டுவசதி வாரியம் விண்ணப்பித்தது.
இதன் அடிப்படையில், நில வகைப்பாடு மாற்றம் செய்வதற்காக, பொது மக்களிடம் கருத்து கேட்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., தொடங்கியுள்ளது.
21 நாள் அவகாசம் இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை பட்டினப்பாக்கத்தில், மூன்று குறிப்பிட்ட 'சர்வே' எண்களுக்கு உட்பட்ட, 21.37 ஏக்கர் நிலம் தற்போது, ஒரு பகுதி ஆதார குடியிருப்பு, ஒரு பகுதி நிறுவன பயன்பாடு, ஒரு பகுதி திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு வகைப்பாட்டில் உள்ளது.
இதை வணிக நோக்கத்தில், வணிக வளாகம் என்ற நில வகைப்பாட்டுக்கு மாற்ற, வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
இதுகுறித்து, முழுமையான வரைபடங்கள், எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலக கலந்தாலோசனை மையத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
சம்பந்தப்பட்ட பகுதி மக்கள், அலுவலக நாட்களில் மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை, இந்த விபரங்களை பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைசெயலகம் கட்ட, சில மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போக்கு வரத்து நெருக்கடி ஏற்படும் என, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எதிர்கட்சிகள் எதிர்ப்பை த.வெ.க., தலைமை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், மீனவ சமுதாய மக்கள் ஆதரவுடன், பணியை முடிக்க வேண்டும் என்பதில், முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார்.
புதிய தலைமை செயலகம் அமைவதால், அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும், மறைமுக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இதுகுறித்த உண்மை நிலையை, மீனவ சமுதாய தலைவர்களுக்கு எடுத்துக்கூற அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, புதிய தலைமை செயலம் அமையவுள்ள மயிலாப்பூர் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும், உணவுத்துறை அமைச்சருமான வெங்கட ரமணன், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் தலைமையில், பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இக்குழுவினர், பட்டினப்பாக்கம் சென்று, பல்வேறு மீனவ அமைப்புகளை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய உள்ளனர்.
அரசின் இந்த முயற்சிக்கு எந்த அளவு பலன் கிடைக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.