Politics
முதலமைச்சரின் புதிய அலுவலகப் பணி... டெண்டர் இறுதியானது!

முதலமைச்சரின் புதிய அலுவலகப் பணிக்கான டெண்டர் ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிய அலுவலகம் அமையும்.
முதலமைச்சரின் புதிய அலுவலகப் பணிகளுக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு பிரபல கட்டுமான நிறுவனம் இறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தற்போதைய அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10ஆவது தளத்திற்கு முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக அதில் பிளாக் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என பிரிக்கப்பட்டு அலுவலக பணிக்கான டெண்டர் கோரப்பட்டது. இதில், குறைவான தொகைக்கு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முன்வந்த ராசி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்காக பொதுப்பணித் துறை சார்பில் மொத்தம் 5 கோடியே 54 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், டெண்டரில் பங்கேற்ற ராசி நிறுவனம் 3 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு பணிகளை முடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டது. பொதுப்பணித் துறை நிர்ணயித்த தொகையை விட இது 38 சதவீதம் குறைவாகும்.
எனவே, ராசி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டதால் விரைவில் அதற்கான பணியாணை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பணியாணை கிடைத்ததும் மூன்று மாதங்களுக்குள் முதலமைச்சரின் புதிய அலுவலகம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
