Politics
சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலக கட்டடம் முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ''சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டசபை மற்றும் தலைமை செயலகம், 20 லட்சம் சதுரடி பரப்பளவில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் விஜய் அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று, 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தற்போது, தலைமை செயலகம் இரண்டு கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது. தலைமை செயலக பிரதான கட்டடமான ஜார்ஜ் கோட்டை, கவர்னரின் இருப்பிடமாக கட்டப்பட்டது.
தற்போது சட்டசபை, முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலர், நிதி உள்ளிட்ட முக்கிய துறைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
மாற்றம் இவ்வளாகம், 2.07 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது.விரிவடைந்து வரும் மாநில அரசின் நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை, 3.75 லட்சம் சதுரடி பரப்பளவில், 1978ம் ஆண்டு கட்டப்பட்டது. இது, தரைத்தளம் மற்றும், 10 தளங்களுடன் உள்ளது.
இக்கட்டடங்களில், 30க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் செயலர்கள், அலுவலர்கள் மற்றும் 6,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இடப்பற்றாக்குறை காரணமாக, நிர்வாக நலன் கருதி, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. பின்னர், அது பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரியாக மாற்றப்பட்டது.
தமிழகத்தின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலகத் தரத்திலான பொது நிர்வாக உட்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும், ஒருங்கிணைந்த புதிய தலைமை செயலக வளாகம் அமைப்பது இன்றியமையாதது.
புதிய தலைமை செயலக கட்டடத்தில், அனைத்து அரசு துறைகளும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.
தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் பசுமை கட்டட தர நிலைகளுக்கு உட்பட்டு, நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.
நவீன வசதிகள் போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்கள், வரலாற்று சின்னங்களாக பாதுகாக்கப்படும். அடுத்த 100 ஆண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டசபை மற்றும் தலைமை செயலகம் சென்னையில், 20 லட்சம் சதுரடி பரப்பளவில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டுகளில், அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லும் வகையில், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.
இதில், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட, நவீன உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.
இந்த வளாகம், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு, ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு உதவும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.